வீட்டிலும், மருத்துவமனையிலும் ஜெயலலிதாவுக்கு நடந்தது என்ன?

379 0

முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை சரியானதல்ல, அவருக்கு வெகுகாலமாக தவறான மருந்துகள் கொடுக்கப்பட்டுவந்தன என்ற குற்றச்சாட்டுகள் ஓ. பன்னீர்செல்வம் அணியாலும் வேறு சிலராலும் சுமத்தப்பட்டன. இந்த நிலையில், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த விரிவான தகவல்களை மார்ச் 6ஆம் தேதியன்று வெளியிட்டது தமிழக அரசு.

செப்டம்பர் 22ஆம் தேதி இரவு. முதலமைச்சரின் இல்லமான போயஸ் கார்டனின் வேதா இல்லத்திலிருந்து வந்த தொலைபேசி அழைப்பையடுத்து, க்ரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று அங்கே அனுப்பப்பட்டது.

மருத்துவர்களின் அணி ஒன்றும் உடன் சென்றது. போயஸ் கார்டன் இல்லத்திற்குச் சென்று பார்த்தபோது, முதல்வர் ஜெயலலிதா மயக்கமான நிலையில் இருந்தார். யார் பேசுவதற்கும் அவர் தொடர்ச்சியாக பதிலளிக்கவில்லை. உடனடியாக அவர் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு 10.25க்கு மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார்.

மருத்துவமனைக்கு கொண்டுவரப்படும்போதே அவருக்கு மூச்சுத் திணறல் இருந்தது. ரத்த அழுத்தம் 140/100ஆகவும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 560ஆகவும் இருந்தது. நுரையீரலில் நீர் கோர்த்திருந்தது. இதயத் துடிப்பின் அளவும் அதிகமாக இருந்தது. அவரது உடல் நிலை மிக மோசமாக இருந்ததால் அவசரகால சிகிச்சைப் பிரிவிலிருந்து அவர், MDCCU எனப்படும் மல்டி டிஸிப்ளினரி கிரிட்டிகல் கேர் யூனிட்டிற்கு மாற்றப்பட்டார்.

அவருக்கு வென்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டது. ரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கான மருந்துகள், ஆன்டிபயோடிக்குகள், மூச்சு விடுவதை எளிதாக்குவதற்கான மருந்துகள், இன்சுலின் ஆகியவை அளிக்கப்பட்டன.

அவரது உடலில் காணப்பட்ட வேறு சில தொற்றுகளுக்கும் மருந்துகள் அளிக்கப்பட்டன. இரண்டாவது நாளில் அவரது உடல்நிலை மேம்பட ஆரம்பித்து. குடும்பத்தினருடனும் அரசு அதிகாரிகளுடனும் சிறிது நேரம் பேசினார் ஜெயலலிதா.

ஜெயலலிதா 

அவருக்கு ஏற்கனவே கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை நோய், அதிக உடல் எடை, ரத்த அழுத்தம், தைராய்டு, ப்ரோங்கைட்டீஸ் போன்ற பிரச்சனைகள் இருந்துவந்துள்ளன. தோல்நோய்க்காக ஸ்டீராய்டு மருந்துகளும் அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்தன. மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு முன்பாக, அவர் காய்ச்சலிலும் அவதிப்பட்டு வந்தார்.

அதிகரித்த மூச்சுத் திணறல்

தொடர்ந்து செய்யப்பட்ட சோதனைகளில் அவரது உடலில் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதனைக் குறைப்பதற்கான தொற்று – எதிர்ப்பு மருந்துகள் அவருக்கு அளிக்கப்பட்டன.

ஐசியூவில் இருந்த நான்காவது நாள் அவருக்கு மூச்சுத் திணறல் அதிகரித்தது. இதயத்திலும் பிரச்சனைகள் இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால், உடனடியாக இதய அறுவை சிகிச்சை தேவையில்லை என மருத்துவர்கள் முடிவெடுத்தனர்.

மருந்துகளும் சிகிச்சைகளும் தொடர்ந்தன. ஐந்தாவது நாள் அதாவது செப்டம்பர் 27ஆம் தேதி அரசு அதிகாரிகளோடு அவர் பேசியதாக அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்தது.

ஜெயலலிதாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதும், நீங்குவதுமாக இருந்தது. 28ஆம் தேதி நிலைமை மோசமடைந்தது. சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்புதல் பெற்ற பிறகு, மருந்துகள் மூலம் மயக்க நிலைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

இதய பிரச்சனைகள், நுரையீரல் பிரச்சனைகள் தொடர்ந்துவந்தன. நோய்த் தொற்றுக்கு அளிக்கப்பட்ட மருந்தின் அளவு மட்டும் குறைக்கப்பட்டது. 30ஆம் தேதி அவரது சுவாசப் பிரச்னை மேலும் மோசமடைந்தது. நுரையீரலில் நீர் கோர்ப்பது குறையவில்லை.

பிரிட்டனில் இருந்து வரவழைக்கப்பட்ட சிறப்பு மருத்துவர்

பிரிட்டனைச் சேர்ந்த தீவிர சிகிச்சை மருத்துவரான ரீச்சர்ட் பீல் வரவழைக்கப்பட்டு, ஆலோசனைகள் நடத்தப்பட்டன. ஜெயலலிதா நீண்ட காலம் மருத்துவமனையில் இருக்க வேண்டியிருக்கும் என்பது அரசு அதிகாரிகளுக்கும் குடும்பத்தினருக்கும் விளக்கப்பட்டது. அவர் மரணமடைவதற்கான வாய்ப்பு 40 சதவீதம் இருப்பதாக அந்தத் தருணத்தில் கணக்கிடப்பட்டது.

ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட அப்போலோ மருத்துவமனை
 

அடுத்த இரண்டு நாட்களில் அவரது உடல்நலம் சற்று மேம்பட்டது. புதிதாக நோய்த் தொற்று எதுவும் வரவில்லை. காய்ச்சல் குறைந்திருந்தது. ரத்தத்திலும் சிறுநீரிலும் தொற்று நீங்கியிருந்தது. உடலில் பொறுத்தப்பட்டிருந்த குழாய்கள் அகற்றப்பட்டன.

ஆனால், வென்டிலேட்டர் ஆதரவைக் குறைக்கும் முயற்சியில் பெரிய வெற்றிகிடைக்கவில்லை. அக்டோபர் 5ஆம் தேதியன்று தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள், அப்பல்லோ மருத்துவர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இதற்கிடையில், ஜெயலலிதாவின் இதயத் துடிப்பு திடீர் தீடீரென அதிகரிப்பதும் குறைவதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு முன்பாக, மிகவும் குளிரான அல்லது வெப்பமான சூழலில் அவருக்கு இவ்வாறு ஏற்படும் என்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து அவர் வென்டிலேட்டர் உதவியுடன் இருக்க வேண்டும் என்பதால் அவருக்கு அக்டோபர் 7ஆம் தேதியன்று ‘டிராகியொஸ்டமி’ செய்யப்பட்டு, குழாய் பொறுத்தப்பட்டது.

ஆனால், அவரது நுரையீரலில் நீர் கோர்ப்பது நிற்கவில்லை. இதற்கான சிகிச்சைகளுக்குப் பிறகு, வென்டிலேட்டர் ஆதரவைக் குறைக்கும் முயற்சிகள் நடத்தப்பட்டன. மெல்ல மெல்ல அவருக்கு நினைவு திரும்பியது. அவரால் மற்றவர்களுடன் தகவல்களைத் தெரிவிக்க முடிந்தது. வாய் மூலம் தண்ணீர், பழரசம் போன்றவற்றை சிறிய அளவில் அருந்தினார்.

‘தூக்கம் வராமல் இருப்பது ஒரு பெரும் பிரச்சனையாக இருந்தது’

அவருக்கு தொடர்ந்து நுரையீரலில் நீர் கோர்ப்பதற்கு, இதயத்தில் ஏற்பட்டிருக்கும் பிரச்சனையே காரணம் என்று கண்டறியப்பட்டது. மருத்துவமனைக்கு வெளியில் உள்ள இதய நோய் நிபுணர்களிடம் ஆலோசனை கேட்க வேண்டுமென குடும்பத்தினர் வலியுறுத்தியதால், அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் ஸ்டூவர்ட் ரஸ்ஸல், பிரிட்டனின் பாப்வொர்த் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் ஜெயன் பரமேஸ்வர் ஆகியோரின் ஆலோசனைகள் தொலைபேசி மூலம் பெறப்பட்டன.

இந்த காலகட்டத்தில் இரவில் அவருக்கு தூக்கம் வராமல் இருப்பது ஒரு பெரும் பிரச்சனையாக இருந்தது. அதே நேரத்தில் அவர், தொடர்ந்து சைகை மூலமும் உதட்டசைவுகளாலும் மருத்துவர்களிடமும் செவிலியர்களிடமும் தகவல்களைப் பரிமாறிவந்தார். அவருக்கு உடற்பயிற்சி துவங்கப்பட்டது. உணவுகளை அருந்த ஆரம்பித்தார்.

அடுத்த சில நாட்களில் இதயத்தை ஒழுங்காக செயல்பட வைக்கும் கருவிகள், மருந்துகள் தொடர்ந்து தரப்பட்ட அதேவேளை, மெல்ல மெல்ல வென்டிலேட்டர் ஆதரவு குறைக்கப்பட்டு வந்தது. இரவில் தூங்குவதற்கு மருந்து அளிக்கப்பட்டது. அவர் தொடர்ந்து வாய்வழியாக உணவு உட்கொண்டுவந்தாலும் புரதச் சத்து போதாமல் இருந்ததால், அவருக்கு ஐ.வி. குழாய் மூலம் புரதச் சத்து அளிப்பது நவம்பர் ஒன்றாம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டது.

வீட்டிலும், மருத்துவமனையிலும் ஜெயலலிதாவுக்கு என்ன நேர்ந்தது? 

அப்பல்லோவைச் சேர்ந்த பிஸியோதெரபி நிபுணர்களுடன், சிங்கப்பூரிலிருந்தும் பிஸியோதெரபி நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. படுக்கை நுனியில் அமரச் செய்வது, சக்கர நாற்காலியில் அமரச் செய்வது ஆகியவை ஊக்குவிக்கப்பட்டன. சுவாசிப்பதற்கு டி – பீஸ் எனப்படும் குழாய் பொருத்தப்பட்டது. மெல்ல மெல்ல வென்டிலேட்டர் நீக்கப்பட்டது.

நவம்பர் 13ஆம் தேதியன்று உடலில் பொருத்தப்பட்டிருந்த குழாய்கள் அனைத்தும் அகற்றப்பட்டன. டிராக்கியோஸ்டமி குழாயின் அளவு குறைக்கப்பட்டது. நவம்பர் 14ஆம் தேதியன்று பேசுவதற்கு ஜெயலலிதா ஊக்குவிக்கப்பட்டார். சில கருவிகளின் உதவியால் அவரால் பேச முடிந்தது.

இதற்குப் பிறகு இரவில் மட்டும், அதாவது இரவு 11 மணி முதல் காலை 6 மணிவரை வென்டிலேட்டர் பொருத்தப்பட்டது. பிற நேரங்களில் தானாகவே சுவாசித்தார். நவம்பர் 19ஆம் தேதியன்று ஐசியுவிலிருந்து சாதாரண சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார். டிராக்கியோஸ்டமி குழாயுடன் பேசுவது அவருக்கு சிரமமாக இருந்ததால், குழாயின் அளவு மேலும் குறைக்கப்பட்டது.

ஆனால், திடீர் திடீரென ரத்த அழுத்தம் அதிகரிப்பது, இதயத்தில் உள்ள பிரச்சனைகள் நீடித்துவந்தன.

டிசம்பர் 4ஆம் தேதியன்று அவருடைய பொட்டாசியம் அளவு இயல்பு நிலைக்கு வந்தது. அவருக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம் என்றாலும் உடனடியாக அதைச் செய்ய வேண்டியதில்லை; பின்னொரு நாளில் செய்துகொள்ளலாம் என்று மருத்துவர்கள் முடிவெடுத்து ஜெயலலிதாவிடமும் உறவினர்களிடமும் தெரிவித்தனர்.

அவர் உற்சாகமாக உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வாய் வழி உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டுமென்றும் மருத்துவர்கள் ஜெயலலிதாவிடம் கூறினர்.

வீட்டிலும், மருத்துவமனையிலும் ஜெயலலிதாவுக்கு என்ன நேர்ந்தது?

ஆனால், அந்த டிசம்பர் 4ஆம் தேதி அவருக்கு இருமல் ஏற்படுவது அதிகரித்தது. சோதனையில் புதிதாக அவருக்கு நிமோனியா ஏற்பட்டிருக்கலாம் என்று கண்டறியப்பட்டது. அவருக்கு அளிக்கப்பட்டுவந்த ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கப்பட்டது. காலை உணவை வாந்தியெடுத்தார் ஜெயலலிதா.

மாலை 4.20. செவிலியர்கள், மருத்துவர்கள், உறவினர்கள் சூழ்ந்திருக்க டிவி பார்த்துக்கொண்டிருந்தார் ஜெயலலிதா. திடீரென மூச்சு விடுவது சிரமாக இருப்பதாகக் கூறினார். உடனடியாக அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டது. விரைவிலேயே இதயத் துடிப்பு குறைய ஆரம்பித்து. ஒரு கட்டத்தில் துடிப்பு இல்லாத நிலை காணப்படவே, இதயத்தை உயிர்ப்பிக்கும் முயற்சிகள் துவங்கின.

அரை மணி நேரத்திற்குப் பிறகும் முன்னேற்றம் இல்லாத நிலையில், அவருக்கு கடைசி முயற்சியாக எக்மோ கருவி பொருத்தப்பட்டது. ஆனால், ரத்த வெள்ளையணுக்கள் குறைய ஆரம்பித்ததால், ரத்தம் வெளியேற ஆரம்பித்தது. ஐசியு அறைக்குக் கொண்டுசெல்லப்பட்டவருக்கு தீவிர சிகிச்சை தொடர்ந்தது.

டிசம்பர் 5ஆம் தேதியன்று எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் கில்னானி மருத்துவமனைக்கு வந்து, ஜெயலலிதாவை ஆய்வுசெய்தார். ஜெயலலிதாவின் நரம்புமண்டலத்திற்கு நடத்தப்பட்ட சோதனைகளில் மூளைத் தண்டு செயலிழக்க ஆரம்பித்திருப்பது தெரிய வந்தது. இதயத் துடிப்பில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில், ஜெயலலிதா தொடர்ந்து எக்மோ கருவியின் உதவியுடனேயே இருந்துவந்தார்.

ஐந்தாம் தேதி இரவு 10 மணியளவில் மீண்டும் சோதனைகள் நடத்தப்பட்டதில், அவரது இதயத்தின் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இனி அவர் அதிலிருந்து மீள மாட்டார் என்பது மருத்துவர்களுக்குப் புரிந்தது.

எக்மோ கருவியை நீக்குவதற்கு ஒப்புதல்

நிலவரம் குறித்து தலைமைச் செயலர் ராம் மோகன் ராவ், மூத்த ஆமைச்சராக இருந்த ஓ. பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதரத்துறை செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன், ஜெயலலிதாவின் தோழி சசிகலா, நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

அனைவருமே எக்மோ கருவியை நீக்கிக்கொள்வதற்கு ஒப்புதல் அளித்தனர். எக்மோ கருவி விலக்கிக்கொள்ளப்பட, இரவு 11.30 மணியளவில் ஜெயலலிதா மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

உயிரிழந்த ஜெயலலிதா 

செப்டம்பர் 22-ஆம் தேதி நினைவிழந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்ட முதலமைச்சர் ஜெயலலிதா, 75 நாள் மருத்துவமனையில் இருந்து பெற்று சிகிச்சை பலனளிக்காமல் டிசம்பர் ஐந்தாம் தேதி நள்ளிரவில் உயிரிழந்தார்.

செப்டம்பர் 22-ஆம் தேதி அவர் தனது வீட்டில் இருந்தபோது, அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதே தவிர, அதிர்ச்சிதரத்தக்க வகையில் எதுவும் நடக்கவில்லை எனவும் தமிழக அரசு விளக்கமளித்தது.

Leave a comment