அடிப்படை ஆதாரம் ஏதுமின்றி உண்மைக்கு மாறாக செய்தி வெளியிட்டிருக்கும் உதயன் நாளிதழின் செயல் ஊடக தர்மத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. உண்மைக்கு மாறான செய்தியை வெளியிட்டுள்ளதன் மூலம் எனது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ள உதயன் நாளிதழ் நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
“கூட்டு அறிவிக்கப்பட்டு 21 நாள்களிலேயே சுரேஷ் க.குமார் பிரிவு” என்ற தலைப்பிட்டு 03.12.2017 திகதிய உதயன் நாளிதழில் முன்பக்கத்தில் பிரதான செய்தியாக வெளிவந்திருக்கும் செய்தி குறிப்பிலேயே உண்மைக்கு மாறான இத் தகவல் இடம்பெற்றுள்ளது.
‘ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இந்த இரண்டு கட்சிகளின் தலைவர்களும், வடக்கு மாகாண சபையின் அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன், மன்னார் மாவட்டத்தில் மாகாண சபைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த வி.எஸ்.சிவகரன் ஆகியோர் கிளிநொச்சியில் நேற்றுக் கலந்துரையாடல் நடத்தியுள்ளனர். விரைவில் இந்தக் கூட்டு இடையேயான ஒப்பந்தம் கைச்சாத்தாகக் கூடும் என்று தெரியவருகின்றது.’ என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மைக்கு மாறான இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிப்பதுடன் அதனால் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விசமத்தனத்திற்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் நான் பங்கேற்கவும் இல்லை. அன்றைய தினம் கிளிநொச்சிக்கு செல்லவும் இல்லை. அவ்வாறு இருக்கையில் உண்மைக்கு மாறாக செய்தி வெளியிட்டுள்ளதன் மூலம் எனக்கு எதிரான உதயன் நாளிதழின் விசமத்தனம் தொடர்ந்து வருகின்றது.
இவ்வாறே கடந்த 2013 மாகாண சபைத் தேர்தல் காலத்தில் நான் இலங்கை அரசுடன் இணைந்து விட்டதாக உதயன் நாளிதழ் வெளியிட்ட சிறப்பு பதிப்பில் முக்கிய செய்தியாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உண்மைக்கு புறம்பாக அடிப்படை ஆதாரமற்ற செய்திகளை வெளியிட்டு எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதன் மூலம் அரசியல் அரங்கில் இருந்து என்னை வெளியேற்றிவிடலாம் என்று எண்ணியே இவ்வாறான விசமத்தனங்கள் தொடர்ந்தும் அரங்கேற்றப்பட்டு வருகின்றது.
இந்த சலசலப்பிற்கெல்லாம் அஞ்சி அரசியல் களத்தை விட்டு ஓடி ஓழிந்து கொள்வேன் என்று இதன் பின்னால் இருப்பவர்கள் கருதுவார்களேயானால் அவர்களது கனவு கனவாகவே தொடரும் என்பதை ஆணித்தரமாக கூறிக்கொள்கின்றேன்.
சாதாரண அரசியல் வாதியாக நான் தமிழ்த் தேசிய அரசியலுக்கு வரவில்லை. நீதி நியாயத்திற்காக துணிச்சலுடன் போரடிய போராளியாக இருந்தே அரசியல் பிரவேசம் செய்துள்ளேன். அரசியல் போராளியாக எனது மக்கள் பணி தொடரும் என்பதை அறுதியிட்டுத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனந்தி சசிதரன்
அமைச்சர்.