December 03, 2017
Norway
தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான பாதையில் பயணிக்கும் தமிழ்த் தேசிய பற்றாளர்களின் ஒன்றிணைவென்பது காலத்தின் கட்டாயமென்பதை சம்பந்தப்பட்ட அனைவரும் உணர்ந்து கொள்கை அடிப்படையிலான கூட்டணி ஒன்றை விரைந்து உறுதியாக முன்னெடுக்குமாறு உலகத் தமிழர்களின் சார்பாக உரிமையோடு கேட்டுக்கொள்கின்றோம்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் வடிவமாக உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று சிங்கள-இந்திய-அமெரிக்க நலன்களை முன்னிலைப்படுத்தியதான அரசியல் செயல்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. இவ்வாறு தமிழர் விரோத பாதையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் சென்றுகொண்டிருப்பதை தாயகத் தமிழர்கள் உள்ளிட்ட உலகத் தமிழர்கள் நன்றாக உணரத்தொடங்கிவிட்டார்கள்.
அதன் வெளிப்பாடாகவே நேரடியாக மக்களை சந்திக்க திராணியற்றவர்களாக படை பந்தோபஸ்துகளுடன் வலம் வந்துகொண்டிருக்கின்றனர். தமிழ் மக்களின் வாக்குகளால் தெரிவான இவர்கள் தமிழ் மக்களை சந்திக்கவே அச்சப்படும் நிலையேற்பட்டுள்தென்றால் மக்கள் விழிப்படைந்துவிட்டார்கள் என்பது நிரூபனமாகிறது.
திரைமறைவில் சம்பந்தன்-சுமந்திரன் மாவை போன்றோர் மேற்கொண்டு வந்த தமிழர் விரோத செயற்பாடுகளை அம்பலப்படுத்திய போதிலும் தமிழீழத் தேசியத் தலைவரால் கைகாட்டப்பட்ட தலைமை என்ற விடயம் ஏற்படுத்திக் கொடுத்திருந்த பாதுகாப்புக் கேடயம் தற்போது சுக்குநூறாக உடைந்துபோய்விட்டது. சாதாரண மக்களாலும் உணரப்படும் அளவிற்கு சம்பந்தன்-சுமந்திரன் கூட்டில் தமிழினத் துரோக செயற்பாடுகள் மலினப்பட்டுள்ள இவ்வேளையில் தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்காக சமரசமின்றி அறவழியில் போராடிக் கொண்டிருப்போர் ஒன்றிணைவது காலத்தின் காட்டாயமாகும்.
தாயக அரசியல் வெளி துரோக அரசியலால் கபளீகரம் செய்யப்பட்ட போது ‘எழுக தமிழ்’ ஒன்றுகூடல் நிகழ்வுகள் மூலம் அதனை உடைத்தெறிந்த, தமிழ்த் தேசிய பற்றாளர்கள், பொது அமைப்புகள் மற்றும் சிவில் சமூகத்தினர் உள்ளடக்கிய தமிழ் மக்கள் பேரவை தற்போதைய சூழலையும் சரிவரப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
நீண்ட காலப் போராட்டத்திற்கு மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் துரோகத்தனத்தை வெகுசனங்கள் மத்தியில் கொண்டுபோய் சேர்த்துள்ள இன்றைய நிலையில் கொள்கைப் பற்றுறுதியுடன் ஒன்றிணைந்த மாற்று கூட்டணி ஒன்றை மக்களுக்கு அறிமுகம் செய்துவைக்கும் தார்மீக பொறுப்பும் கடமையும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேசுவரன் அவர்களை இணைத் தலைவராகக் கொண்டு இயங்கிவரும் தமிழ் மக்கள் பேரவைக்கு உண்டு என்பதை இவ்விடத்தில் சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளோம்.
தாயகம்-தேசியம்-தன்னாட்சி உரிமை ஆகிய மூலாதாரக் கோட்பாடுகளை உள்ளடக்கிய தமிழர்களின் அரசியல் அபிலாசைகள் வழியே அரசியல் பயணத்தை தொடரும் அனைவரும் வேற்றுமைகள் துறந்து மக்கள் நலனை முன்னிறுத்தி ஒன்றிணைந்து வரும் உள்ளூராட்சித் தேர்தலை எதிர்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
கொள்கை அடிப்படையில் வலுவான கூட்டணி ஒன்றை அமைக்காவிடில் தமிழ்த் தேசிய விரோதப்போக்குள்ளோர் வெல்வது சுலபமாகிவிடும். தமிழ்த் தேசியப் பற்றாளர்கள் ஒன்றிணையவில்லை என்றால் தமிழ்த் தேசியத்தை மறுதலிப்போர் வெற்றியடைவதுடன் மட்டும் முடிந்து போய்விடாது, ஒற்றையாட்சியின் மகுட வாசகத்துடன் கொண்டுவரப்பட்டிருக்கும் அரசியலமைப்பு இடைக்கால வரைபிற்கான மக்கள் ஆணையாக மடைமாற்றும் ஏமாற்றுவித்தை அரங்கேறும் என்பது திண்ணம்.
ஆகவே, இப்போது நம்பிக்கையான கொள்கைப் பற்றாளர்களின் கூட்டணி ஒன்றை மக்கள் முன் அறிமுகப்படுத்த தவறுவோமாயின் வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக மக்களின் தெரிவு அமைந்துவிடும் பேராபத்து எம்மை சூழ்ந்துள்ளது என்பதனை அனைவரும் உணர்ந்து விரைந்து உறுதியான முடிவெடுக்க வேண்டுமென உலகத் தமிழர்களின் சார்பாக உரிமையோடு கேட்டுக் கொள்கின்றோம்.
‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’
அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!