சூரிய சந்திர இயக்கம் இருக்கும் வரை இந்த நாட்டில் ஒரு கொத்து அரிசி 25 சதங்களுக்கு மேல் விற்கப்படமாட்டாது. மேற்கண்டவாறு இலங்கை சுதந்திரமடைந்த பின்னரான தேசிய அரசின் முதலாவது தலைமை அமைச்சரான டி.எஸ்.சேனநாயக்கவின் மறைவை அடுத்து தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்ற அவரது மகனான டட்லி சேனநாயக்க நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கியிருந்தார்.
சுதந்திர இலங்கையின் பொது மக்களும் அந்த வாக்குறுதி குறித்து திருப்தியடைந்திருந்தனர். டட்லி சேனநாயக்கவின் தலைமையிலான அந்த அரசில் நிதி அமைச்சராகப் பதவி வகித்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன, அரிசி விலையை கொத்து 25 சதமாக வழங்குவதன் மூலம் நாங்கள் நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு முட்டுக் கட்டைபோட்டு வருகிறோம் எனத் தெரிவித்தார், அந்த ஆண்டில்தான் (1950ஆம் ஆண்டில்) இலங்கை உலக வங்கியில் அங்கத்துவத்தைப் பெற்றிருந்தது.
இலங்கை அரசு நாட்டு மக்களுக்கு வழங்கும் நிவாரண உதவிகள் மற்றும் கடனுதவிகளை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டுமென உலக வங்கி இலங்கை அரசை வலியுறுத்தியது. புதிய அரசுக்கு நாட்டு மக்கள் அதிகாரத்தை வழங்கியிருந்தபோதிலும், நாட்டு மக்களது அத்தியாவசிய பாவனைப் பொருளுக்கான விலைகள் ஆகாயத்தைத் தொடுமளவுக்கு உயர்வடைந்திருந்தன.
பாடசாலை மாணவர்களுக்கான இலவச உணவு விநியோகம் இதனால் தடைப்பட்டது. அரச ஊழியர்களது சம்பள உயர்வுகள் பிற்போடப் பட்டன. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, பயங்கரமான விளைவாக அமைந்தது 1950ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மூலம் ஒருகொத்து அரிசியின் விலை 70 சதமாக அதிகரிக்க வைக்கப்பட்டமையாகும்.
உண்மையில் தமது அறிவுறுத்தல், முறைப்படி நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பது குறித்துத் தெரிந்துகொள்ள உலக வங்கியின் கண்காணிப்பாளர் சேர் சிட்ணி கேஸ் தலைமையிலான குழு இலங்கைக்கு வந்திருந்தது.
அந்த வேளையில் நாடளுமன்றில் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திய லங்கா சமசமாஜக்கட்சி உட்பட இடதுசாரித் தரப்புகள் மீது நாட்டின் தொழிலாளர் வர்க்கத்தினர் பெரும் மதிப்பளித்து வந்தனர். நாட்டின் முதலாளித்துவத் தரப்பினரது சுரண்டல்களிலி ருந்த தொழிலாளர் வர்க்கத்தைக் காப்பாற்றும் இரட்சகர்களாக தொழிலாளர் வர்க்கத்தவர்களால் கருதப்பட்ட இடதுசாரிகள் நிலமை குறித்து தொழிலாளர் வர்க்கத்தவர்களை எச்சரித்ததோடு, அரசுக்கு எதிராக அவர்களைக் கிளர்ந்தெழ வைக்கும் முயற்சிகளிலும் வெற்றி கண்டனர்.
தொழிலாளர் வர்க்கத்தவர்களை ஒன்றிணைப்பதில் வெற்றிகண்ட இடதுசாரி அரசியல் தரப்பினர்கள்
இவ்விதம் தொழிலாள வர்க்கத்தினரை அரசுக்கு எதிராகக் கிளர்ந்தெழ வைப்பித்தவர்களில் சமசமாஜக்கட்சியின் தலைவர் என்.எம்.பெரேரா, கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் பீற்றர் செனமான் மற்றும் புரட்சிகர சமசமாஜக் கட்சித்தலைவர் பீற்றர் செனமான் மற்றும் புரட்சிகர சமசமாஜக் கட்சித் தலைவர் பீற்றர் கெனமான் ஆகியோர் முக்கியமான வர்கள். நாட்டின் பல்வேறு அரச துறைகளில் பணியாற்றிய தொழிலாள வர்க்கத்தினரது தொழிற்சங்கங்கள் இது விடயத்தில் முக்கிய பங்களிப்பை வழங்கிச் செயற்பட்டன.
முதலில் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஆரம்பித்து பின்னர் பணிப்புறக்கணிப்பு, ஆர்ப்பாட்ட எதிர்ப்பு ஊர்வலங்கள், மற்றும் முழு அடைப்புப் போராட்டம் என்ற அளவுக்கு உச்சம் பெற்றன.
இடதுசாரிக்கட்சிகள் தொழிலாளவர்க்கத்தினரைத் தூண்டி நிலைகுலைய குழப்புவதற்கு முன்னர் எப்படியாவது வரவு செலவுத்திட்டத்தை நிறைவேற்றி யாக வேண்டுமென்ற முனைப்பில் ஐ.தே. கட்சி அரசு செயற்பட்டது 1953 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி நாடளுமன்றத்தில் தனது வரவு செலவுத்திட்டத்தை விவாதிக்க ஒழுங்குகள் மேற்கொண்டார் நிதியமைச்சர் ஜே.ஆர். ஆனால் இடதுசாரித் தலைவர்கள் நாடளுமன்றக் கட்டடத்துக்கு முன்பாக கோல்பேஸ் திடலில் தமது ஆதரவாளர்களை ஒன்றுதிரட்டி அரசுக்கு எதிராகப் பெரும் ஆர்ப்பாட்டெமான்றினை ஏற்பாடு செய்தனர்.
ஜ.தே.கட்சி நாடளுமன்ற உறுப்பினர்கள் பலரது விடுகளில் முன்னால் பொதுமக்கள் ஒன்றுகூடி அவர்களை விடுகளுக்குள் முடங்க வைத்தனர். உள்ளூராட்சி மன்றங்கள் பல அரசின் வரவு செலவுத் திட்டத் துக்கு எதிராக முழு அடைப்புப் போராட்டத்துக்கு இடதுசாரிகள் அழைப்பு விடுத்தபோதி லும், அரசு அதனைப் பொருட்படுத்தாது குறித்த தினத்துக்கு ஒருவாரம் முன்னதாக தனது வரவு செலவுத்திட்டத்தை நாடளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொண்டது.
மக்கள் சக்தியை வெளிப்படுத்திய எதிர்ப்பு நடவடிக்கைகள்
அரசுக்கு எதிராகக் கிளர்ந்தெழ வைக்கப்பட்ட நாட்டு மக்கள் தம்மிடையே ஒன்றிணைந்து பல்வேறு வகையான போராட்டங்களை முன்னெடுத்தனர். அரச பணியாளர்கள் தமது கடமைகளுக்குச் செல்லாது புறக்கணித்தனர். நகரங்கள், கிராமங்கள் தோறும் சகல இடங்களிலும் கறுப்புக்கொடிகள் பறக்கவிடப்பட்டன. சந்திகள் தோறும் மரங்களின் கிளைகள் வெட்டிப் போடப்பட்டுப் போக்குவரத்துக்கள் தடைசெய்யப்பட்டன. நெடுஞ்சாலைகளில் படுத்துறங்கித் தமது அரசுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்த பொதுமக்களுக்கு பாதையில் அடுப்பு மூட்டி ரொட்டி தயாரித்துக் கொடுப்பதில் பெண்களும் இணைந்து போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர்.
நாடாளுமன்றக் கட்டடத்திலோ அல்லது வேறு அரச கட்டடங்களிலோ அமைச்சரவைக் கூட்டத்தை நடத்த இயலாத நிலையால், கொழும்புத் துறை முகத்தில் நங்கூரம் இடப்பட்டு நிறுப்படுத் தப்பட்டிருந்த கப்பலொன்றில் அமைச்சர்கள் கூடி அமைச்சரவைக் கூட்டத்தை நடத்த வேண்டிய அளவுக்கு பொது மக்களது எதிர்ப்புத் தீவிரம் அடைந்திருந்தது.
நாட்டு மக்களது எதிர்ப்பு நடவடிக்கைகள் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்தமையால், கடைசியில் எதுவுமே செய்ய இயலாத நிலையில் ஊரடங்குச் சட்டம் பிறப்பித்து இராணுவத்தைப் பயன்படுத்தி மக்கள் போராட்டத்தை அடக்க அரசு தீர்மா னித்தது. ஊரடங்குச் சட்டத்தின் கீழ் குழப்பம் விளைவித்தோருக்கு எதிராக பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் தொழிலாளர்கள் சிலர் உயிரிழக்க நேர்ந்தது.
அரசின் அடக்குமுறைக்கு எதிராக மக்கள் சக்தியின் பலத்தை நிரூபிக்க இடதுசாரித் தலைவர்கள் ஏற்பாடு செய்த எதிர்ப்பு நடவடிக்கைகளால் நெடுஞ்சாலைப் பாலங்கள், புகையிரதப் பாதைகள் என்பவற்றுக்கு ஏற்படுத்தப்பட்ட சேதங்களைப் புனரமைக்க பெரும் செலவும், நீண்ட காலதாமதமும் ஏற்பட்டன.
நாட்டு மக்களது எதிர்ப்புக்காரணமாக வெறுப்புற்ற தலைமை அமைச்சர் டட்லி சேனநாயக்க, தமது உடல் நிலை திருப்திகரமாக இல்லையெனக் காரணம் காட்டித் தமது பதவியின்றும் தாமாக விலகிக் கொண்டார் இதனால் சேர்.ஜோன் கொத்தலாவல தலைமை அமைச்சர் பொறுப்பை எற்கவேண்டி நேரிட்டது. தாம் தலைமை அமைச்சராகப் பொறுப்பேற்றதும் சேர்.ஜோன் கொத்தலாவல, அத்தனை பிரச்சினைகளுக்கும் காரணமான நிதி அமைச்சர் ஜே.ஆரது அந்த வரவு செலவுத்திட்டத்தை கைவிடுகிறேன் என்று அறிவித்தார்.
நாட்டு மக்களை அமைதிப்படுத்த சேர்.ஜோன் கையாண்ட நடவடிக்கைகள்
நாட்டு மக்களை அமைதிப்படுத்தும் நோக்கில் குறித்த வரவு செலவுத்திட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்த சேர்.ஜோன், அடுத்த நிதி அமைச்சர் பதவியிலிருந்து ஜே.ஆரை விலக்கி அவரை விவசாய அமைச்சராக நியமித்தார். அத்தோடு நின்று விடாது கொத்து 70 சதமாக நிர்ணயிக்கப்பட்ட அரிசியின் விலையை 55 சதமாகக் குறைப்பதாக அறிவித்தார்.
ஆனாலும் தமது அத்தகைய செயற்பாடுகளால் அரசின் இருப்பை சேர்.ஜோனால் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. ஐ.தே.கட்சி நாளுக்கு நாள் பொது மக்கள் மத்தியில் மதிப்பிழக்க ஆரம்பித்தது. எந்தவொரு பலம்மிக்க அரசை யும்,நாட்டு மக்கள் விரும்பினால் அதிகாரம் இழக்கவைக்க இயலுமென்பதற்கு இலங்கை அரசியலின் இந்த வரலாற்று நிகழ்வுகள் உதாரணமாக அமைகின்றன. அதனையடுத்து இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஐ.தே.கட்சி படுதோல்வியடைந்ததும், எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக தலைமையிலான சுதந்திரக்கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதும் இலங்கை அரசியலின் வரலாற்று நிகழ்வுகளே.
ஒருபோதும் தோற்கடிக்கப்பட முடியாதவராகப் பேசப்பட்ட முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பதவி இழக்க நேர்ந்ததும் நாட்டு மக்களது அதிருப்தியை அவர் எதிர்கொள்ள நேர்ந்தமையினாலேயே ஆகும்.