புயல் எச்சரிக்கை பற்றி மீனவர்களுக்கு முன் கூட்டியே தெரிவிக்கவில்லை: மு.க.ஸ்டாலின்

294 0

புயல் எச்சரிக்கை பற்றி மத்திய, மாநில அரசுகள் மீனவர்களுக்கு முன் கூட்டியே தெரிவிக்கவில்லை என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டி உள்ளார்.

குமரி மாவட்டத்தில் ஒக்கி புயல் நடத்திய கோர தாண்டவத்தில் மாவட்டமே சின்னாபின்னமானது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் சூறாவளி காற்றில் சிக்கி மாயமாகி விட்டனர்.

கடற்கரை கிராமங்கள் சோகத்தில் மூழ்கி கிடக்கிறது. அவர்களுக்கு ஆறுதல் கூறவும், வெள்ளச் சேதங்களை பார்வையிடவும் மத்திய, மாநில அமைச்சர்கள் குமரி மாவட்டத்துக்கு வந்துள்ளனர்.

தி.மு.க. செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் குமரி மாவட்ட வெள்ளச் சேதங்களை பார்வையிட இன்று வந்தார். நீரோடித்துறையில் மீனவ மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

மு.க.ஸ்டாலினிடம் மீனவ பெண்கள் மாயமான மீனவர்களை உடனடியாக கண்டுபிடித்து தரக்கோரி கண்ணீர் விட்டு கதறினர். அவரது கையை பிடித்தும் கெஞ்சினர். மீனவர்களுக்கும், அவர்களின் உறவினர்களுக்கும் ஆறுதல் கூறிய மு.க.ஸ்டாலின் கூடி இருந்த மீனவர்கள் மத்தியில் பேசியதாவது:-

குமரி மாவட்டத்தில் ஒக்கி புயல் தாக்க இருக்கும் தகவலை வானிலை ஆய்வு மையம் முன் கூட்டியே தெரிவித்தது. ஆனால் அந்த தகவலை மீனவ மக்களுக்கும், மீனவ கிராமங்களில் உள்ளவர்களுக்கும் முன்கூட்டியே முறையாக தெரிவிக்கவில்லை. இதன் காரணமாகவே கடலுக்கு சென்ற மீனவர்கள் புயலில் சிக்கி மாயமாகி உள்ளனர்.

மகனை காணாமலும், கணவர்மார்களை கண்டுபிடிக்க முடியாமலும் இங்கு ஏராளமானோர் கண்ணீர் விடுகிறார்கள். அவர்களுக்கு தி.மு.க. துணை நிற்கும். கட்சி ரீதியாக உங்களை சந்திக்க வரவில்லை. குமரி மாவட்ட பாதிப்புகள் பற்றி அறிந்து தி.மு.க. தலைவர் கருணாநிதி என்னை இங்கு அனுப்பி வைத்தார். அரசியலுக்கு அப்பாற்பட்டு உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.

தற்போது துணை முதல்-அமைச்சரும், அமைச்சர்களும் இங்கு முகாமிட்டு நிவாரணப்பணிகளை செய்து வருகிறார்கள். ஆனால் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளில் முன்கூட்டியே எடுத்திருந்தால் இந்தளவுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்காது. எனவே கடலுக்கு சென்று மாயமான மீனவர்களையும் அவர்களின் வாழ்வாதாரமான படகுகளையும் மீட்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

அண்டை மாநிலமான கேரளாவில் மீனவர்களுக்கு ஒரு பாதிப்பு என்றால் அங்குள்ள அரசு வேகமாக செயல்படுகிறது. அந்த வேகம் தமிழக அரசுக்கும் இருக்க வேண்டும். அதனை எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் நானும் வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவர் அங்கிருந்து மற்ற கிராமங்களுக்கும் சென்றார். அவருடன் எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், மனோதங்கராஜ், ராஜேஷ்குமார், முன்னாள் அமைச்சர் லாரன்ஸ், நாகர்கோவில் நகர செயலாளர் மகேஷ் உள்பட ஏராளமான தி.மு.க. நிர்வாகிகளும் உடன் சென்றனர்.

Leave a comment