புயல் சின்னம் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரையை நோக்கி நகரும் போது தமிழகம் மற்றும் புதுவையில் 7-ந் தேதி மிக பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென் கிழக்கு வங்க கடலில் அந்தமான் அருகே உருவான தீவிர காற்றழுத்த பகுதியானது நேற்று காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்றது.
தற்போது தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு சுமத்ரா தீவு கடற்கரை வரை பரவி நிலை கொண்டுள்ளது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த மண்டலமாக (புயல் சின்னம்) தீவிரம் அடைந்து அடுத்த 3 அல்லது 4 நாட்களில் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரையை நோக்கி நகரும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனால் கடல் சீற்றம் ஏற்படும். தமிழகம், புதுவை மீனவர்கள் நாளை முதல் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புயல் சின்னம் நெருங்கும் போது 6-ந் தேதி (புதன்கிழமை) காலை 8.30 மணி முதல் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலான இடங்களில் மழை பெய்யத் தொடங்கும். 7-ந் தேதி பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயல் சின்னம் சென்னையை நெருங்கினாலும் ஆந்திரா மற்றும் ஒடிசா நோக்கி நகரும் வாய்ப்பு இருப்பதாக வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர்.