மியான்மர் நாட்டில் ரோஹிங்யா என்ற வார்த்தையை பயன்படுத்தாதது ஏன் என்பது குறித்து போப் ஆண்டவர் பிரான்சிஸ் தனது விளக்கத்தை தெரிவித்துள்ளார்.
போப் ஆண்டவர் பிரான்சிஸ், சமீபத்தில் ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் வன்முறைக்கு ஆளான மியான்மருக்கு சென்றிருந்தார். ஆனால் அந்தப் பயணத்தின்போது அவர் ரோஹிங்யா என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது குறித்து போப் ஆண்டவர் பிரான்சிஸ், தனது ஆசிய நாடுகள் பயணத்தை முடித்துக்கொண்டு, நேற்று முன்தினம் நாடு திரும்பும்போது விமானத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நான் அந்த வார்த்தையை பயன்படுத்தி இருந்தால், அது பேச்சு வார்த்தைக்கான கதவை மூடுவது போல அமைந்து விடும். நான் நினைத்தது, அந்த வார்த்தை ஏற்கனவே நன்கு அறிமுகமானதுதானே என்பதுதான். இரு நாட்டுத் தலைவர்களும் (மியான்மர்-வங்காளதேசம்) பேச்சு வார்த்தை நடத்துவதற்கு அது ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் அதை நான் தவிர்த்தேன்.
தவிரவும், நான் வாடிகனில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அந்த மக்களின் துயரத்தை பற்றி சொல்லி இருக்கிறேன்.என் தனிப்பட்ட சந்திப்புகளில், பகிரங்கமாக பேசுவதைத் தாண்டி நான் பேசி இருக்கிறேன். பகிரங்கமாக பேச்சு வார்த்தைக்கான கதவை நான் மூட விரும்பவில்லை. பேச்சு வார்த்தை எனக்கு திருப்தியைத் தருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.