பெண்கள் அரசியலுக்கு வருவதன் மூலமே பெண் சமூகத்தின் முன்னேற்றத்தை உறுதிப்படுத்தமுடியும்! மகளிர் விவகார அமைச்சர் அனந்திசசிதரன்!

24143 0

கொள்கை அடிப்படையில் பெண்கள் அரசியலுக்கு வருவதன் மூலமே பெண் சமூகத்தின் முன்னேற்றத்தை உறுதிப்படுத்த முடியும் என்று யாழ் மூளாய் சைவப்பிரகாச வித்தியாலயத்தில் நடைபெற்ற பெற்றோர் தின விழாவில் பிரதம விருந்தினராக பங்கேற்று உரையாற்றும் போது வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்களின் கல்விச் செயற்பாட்டிற்கு உறுதுணையாகச் செயற்பட்டுவரும் பெற்றோர்களுக்கு நினைவுப் பரிசில்களை வழங்கி கௌரவித்ததைத் தொடர்ந்து
அமைச்சர் அங்கு பேசுகையில்…

பாடசாலை ஆசிரியர்களும் மாணவர்களும் அரசியல் சார்பற்று நடுநிலையானச மூகக்கட்டமைப்பினை உருவாக்குவதற்கு பாடுபட வேண்டும். அரசியல் வாதியாக இருக்கும் நான் இன்று இந்தப் பதவியில் இருக்கலாம் நாளை இன்னொரு கொள்கையை பின்பற்றும் கட்சியைச் சேர்ந்தவர் இருக்கலாம். ஆனால் ஆசிரியர்களோ மாணவர்களோ பிளையாக வழி நடத்தப்படக் கூடாது.

ஏனெனில் அவர்கள் தமது சமூகம் சார்ந்த கட்டமைப்பினை ஒழுக்கமான நல்லதொரு சமூகத்தை தோற்றுவிக்க வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். வட மாகாணத்திற்குட்பட்ட ஐந்து மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் தொடர்பான விடயங்களை ஆசிரியர்கள் தொடர்பான பிரச்சினைகள் எனது பார்வைக்கு கொண்டுவரப்படும் போது அது குறித்து முதலமைச்சர் மற்றும் கல்வி அமைச்சரிற்கு தெரியப்படுத்தி உரிய நடவடிக்கைகள் எடுப்பதற்கு கோரிக்கை வைக்கின்றேன்.

இந்தநாட்டில் நூற்றிற்கு 52 வீதமான பெண்கள் இருக்கின்ற போதிலும் பெண்களின் அரசியல் பற்கேற்பென்பது சொற்பமாகவே இருக்கின்றது. உள்ளுராட்சி தேர்தல்களத்தை பார்த்தோமானால் வெறும் 1.8 சதவிகிதமே பெண்கள் இருக்கிறார்கள். பாராளுமன்றத்தில் 2.8 சதவிகிதமான பெண்களே இருக்கின்றார்கள். வடக்கு மாகாணத்தை பொறுத்த வரையில் 38 உறுப்பினர்களில் ஒரே ஒரு பெண் பிரதிநிதியாக நான் மட்டுமே இருக்கிறேன். இதனால் ஆணாதிக்க சிந்தனை கொண்ட இந்த சமூகத்தில் அரசியலிலும் சரி நிர்வாகத்திலும் சரி பெண்கள் தமது கொள்கைகளையும் செயற்பாடுகளையும் மிகவும் போராட்டத்திற்கு மத்தியிலேயே முன்னெடுத்துச் செல்ல வேண்டியுள்ளது.

எங்களுக்கு கிடைத்திருக்கின்ற கௌரவ முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் நீதியான நேர்மையான மனிதர் என்பதுடன் எதற்கும் விலை போய்விடாதவராகவும் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றார். பெண்களுக்கான முக்கியத்துவத்தினை வழங்குவதிலும் முழு ஈடுபாட்டுடன் செயற்பட்டுவருகின்றார்.

ஆண்களுக்கு நிகரான திறமைகளுடனும் மேம்பட்ட திறமைகளுடனும் பல பெண்கள் இருக்கின்றார்கள். சிலருக்கு அவர்களது திறமைகளை வெளிப்படுத்துவதற்கு சந்தர்பங்கள் கிடைக்கின்றது. பலருக்கு அவ்வாறான சந்தரப்பங்கள் கிடைப்பதில்லை. எல்லாவற்றிற்கும் ஆண்களை சார்ந்து இருந்து வருவதே இதற்கு காரணமாகும்.

கொள்கை அடிப்படையில் பெண்கள் அரசியலுக்கு வருவதன் மூலமே இந்த நிலையை மாற்ற முடியும். நல்ல கல்வியறிவு உள்ள பெண்களும் சமூதாய சிந்தனையுடைய பெண்களும் அரசியலுக்கு வருவதன் மூலமே பெண் சமூகத்தின் முன்னேற்றத்தை உறுதிப்படுத்த முடியுமென்று அமைச்சர் வலியுறுத்திக் கூறியிருந்தார்.

 

Leave a comment