மண்சரிவு அபாய எச்சரிக்கை 24 மணித்தியாலங்களுக்கு நீடிப்பு.!

371 0

மண்சரிவு அபாய எச்சரிக்கை மீண்டும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

ஆறு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையை தொடர்ந்தும் நீடிக்க, தேசிய கட்டட ஆய்வு மையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இன்று காலை 9.30 முதல் நாளை காலை 9.30 வரை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்பிரகாரம், இரத்தினபுரி, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, பதுளை ஆகிய மாவட்டங்களிலுள்ள மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இதேவேளை, மலையக பிரதேசங்களில் மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கூறியுள்ளார்.

குறிப்பாக மண்சரிவுகள், கற்பாறை சரிவுகள் மற்றும் மண்மேடு சரிந்து விழும் அபாயங்கள் குறித்து மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

மண்சரிவுகள் ஏற்படக்கூடிய காரணிகளை அடையாளம் காணும் பட்சத்தில் அந்த பகுதிகளிலுள்ள மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இடர் முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a comment