முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை பதுளைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
பதுளை வீல்ஸ் பார்க் மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் கட்சியின் பதுளை மாவட்ட ஆரம்பப் பொதுக் கூட்டத்தில், முன்னாள் ஜனாதிபதி சிறப்புரையாற்றுவார். இக்கூட்டத்தை முன்னிட்டு பதுளை நகர் வர்ணங்களிலான கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருப்பதுடன், முன்னாள் ஜனாதிபதியின் படங்களைத் தாங்கிய பதாதைகள் தொங்கவிடப்பட்டுள்ளன.
இக்கூட்டத்தின் போது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரி அணியின் பலரும், ஐக்கிய தேசியக்கட்சியைச் சார்ந்த பலரும், மஹிந்த ராஜபக்ஷவின் கட்சியுடன் இணையவுள்ளனர். குறிப்பாக ஊவா மாகாணசபை உறுப்பினர்கள் சிலரும் இக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.
இக்கூட்டத்திற்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாகவும் கூட்டத்திற்கு அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.