சகவாழ்வு, தேசிய நல்லிணக்கம், புரிந்துணர்வு என்ற பட்டியல் மறைக்கப்பட்டு வடக்கே தேசிய கொடி, தெற்கே இனக்கலவரம், வெள்ளப் பெருக்கு, தேர்தல் எல்லை நிர்ணயம், மத்திய வங்கி பிணைமுறி மோசடி, அமைச்சர்களின் ஊழல் என்று புதிய புதிய பிரச்சினைகளை முன்வைத்து அதிகமான ஊடகங்கள் தேசிய நலன்களை அடகு வைக்கும் கைங்கரியத்தை செய்வதாக ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
கண்டி மல்வத்தை பீட மகாநாயக்கத் தேரர் வண. திப்பட்டுவாவே சித்தார்த்த ஸ்ரீ சுமங்கல தேரரை சந்திந்த பின் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார்.
எதிர்வரும் 12ம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைப்பெறவுள்ள சர்வமத தலைவர்களது கலந்துரையாடலுக்கு மகா நாயக்கத் தேரர்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் மல்வத்து மற்றும் உயர் பீடங்களுக்கு அவர் இன்று விஜயம் செய்தார்.
அங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது,
இன்று சமூகத்தின் முக்கிய பேசுபொருளாக இருக்க வேண்டிய இன நல்லிணக்கம் சக வாழ்வு என்பன சில ஊடகங்களில் பின்னோக்கி, கீழ் தள்ளப்பட்டுள்ளன. ஆனால் வேறு வகையான புரளிகள் மேலே உயர்திக்காட்டப்பட்டுள்ளன. வடபகுதி தேசிய கொடி, அமைச்சர்கள் மேற்கொண்டதாகப் பிரசாரம் செய்யும் ஊழல் பிரச்சினை, மத்திய வங்கி முறி, பெற்றோலியப் பிரச்சினை போன்ற பல விடயங்கள் பெரிதுபடுத்தப்பட்டு தேசிய நல்லிணக்கத்திற்கு பங்கம் ஏற்படும் வகையில் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
தேசிய நல்லிணக்கத்தை கட்டி எழுப்புவது எனது கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதற்காக நான் முழு மூச்சுடன் போராடுகின்றேன்.
அடுத்த வருடம் நாட்டிலுள்ள சகல அரச காரியாலயங்களிலும் தமது தாய்மொழியில் தொடர்பு கொள்ளும் பொறி முறை அமுலாக்கப்பட்டு விடும். ஏனெனில் விசேட வேலைத்திட்டங்களின் கீழ் சிங்கள அதிகாரிகளுக்கு தமிழும், தமிழ் அதிகாரிகளுக்கு சிங்களமும் கற்பித்து வருகிறோம். இதற்காக மொழி தொடர்பான அதிகாரிகள் 3000 பேர் நியமிக்கப்பட உள்ளனர். முதற்கட்டமாக உடனடியாக 500 பேர் நியமிக்கப்படுவார்கள். அதற்கென விசேட மொழிப் பிரிவுகள் ஸ்தாபிக்கப்படவுள்ளன. எனவே இன்னும் சிலவாரங்களில் அரச காரியாலயங்களில் மொழி பிரச்சினை இருக்காது.
குடிமக்களுக்கு தமது தாய்மொழியில் தமது தேவைகளைக் கேட்கும் உரிமை உண்டு. அதனை நாம் ஏற்படுத்த உள்ளோம் என்றார்.