ஆர்.கே.நகர் தொகுதியில் ரூ.3.26 லட்சம் பறிமுதல்: பறக்கும்படை அதிகாரிகள் அதிரடி

337 0

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு தண்டையார் பேட்டையில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையின் போது, காரில் கொண்டு வரப்பட்ட ரூ.3.26 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு தண்டையார் பேட்டையில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையின் போது, காரில் கொண்டு வரப்பட்ட ரூ.3.26 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வருகிற 21-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர். மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் பிரசாரத்தையும் தொடங்கி உள்ளன.

இந்த தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் வினியோகிப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதற்காக பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டும், தீவிர வாகன சோதனைகள் நடத்தியும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

அந்தவகையில் தண்டையார்பேட்டை அரிநாராயணபுரம் பகுதியில் பறக்கும் படை அதிகாரி செல்வகுமார் தலைமையில் நேற்று, போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை அதிகாரிகள் மடக்கி சோதனையிட்டனர். அதில் ரூ.3.26 லட்சம் இருந்தது தெரியவந்தது.

அந்த பணத்துக்கு உரிய ஆவணம் எதுவும் இல்லாததால் அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த பணத்தை கொண்டு வந்தவர் குறித்து விசாரணை நடத்திய போது, அவர் திண்டிவனம் கிருஷ்ணன் தெருவை சேர்ந்த சின்னராஜ் என தெரியவந்தது.

அவர் தன்னுடைய மகன் திருமணத்திற்கு நகை மற்றும் துணிகள் வாங்குவதற்காக பணத்துடன் வந்ததாகவும், இதற்காக தண்டையார் பேட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு காரில் வரும் போது சோதனையில் சிக்கியதாகவும் தெரிவித்தார்.

பின்னர் இது குறித்து விசாரணை நடத்திய ஆர்.கே.நகர் போலீசார், அந்த பணத்தை கலெக்டர் அலுவலக கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

Leave a comment