மீனவர்களை மீட்க இந்திய கடலோர காவல் படையினருக்கு உத்தரவிடவேண்டும்!

347 0
நடுக்கடலில் உயிருக்காக போராடி வரும் மீனவர்களை மீட்க இந்திய கடலோர காவல் படையினருக்கு உத்தரவிட வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

ஒகி புயலால் கன்னியா குமரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவுகளையும், அதனால் அம்மாவட்ட மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள். கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமல்லாமல் அருகேயுள்ள தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கன மழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

4 ஆயிரம் மின் கம்பங்கள் விழுந்துள்ளதாகவும், மின் கம்பிகள் அறுந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அம்மாவட்டத்தின் பெரும்பகுதி முழங்கால் அளவுநீரில் மூழ்கியுள்ளதோடு, மின்சார கம்பிகள் அறுந்துள்ளதால் பல இடங்களில் மின்சாரம் வழங்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் மீட்பு முகாம்களில் தங்கியுள்ளனர், கன்னியாகுமரி மாவட்டத்தில் இயல்பு நிலை இன்னும் திரும்பவிலை.

இந்த இக்கட்டானத் தருணத்தில், இந்திய கடலோர காவல் படையும், தேசிய பேரிடர் மீட்புக் குழுவும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வந்தாலும், மீன்பிடிப்பதற்காக 100 படகுகளில் சென்ற 1,000 மீனவர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் நடுக்கடலில் தவித்து வருவதாக மீனவக் குடும்பங்கள் தெரிவிக்கின்றன.

அவர்களுடைய உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுமோ என்ற அச்சத்தில் உள்ளதால், இந்திய கடலோர காவல் படையினர் உடனடியாக மீட்புப்பணிகளில் ஈடுபட வேண்டும்.

எனவே, நீங்கள் உடனடியாக தலையிட்டு, ஒகி புயலால் மேலும் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படாத வகையில், நடுக்கடலில் தங்களது உயிருக்காக போராடி வரும் 1,000 மீனவர்களை மீட்க, இந்திய கடலோர காவல் படையினருக்கு உத்தரவிடவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

Leave a comment