தமிழ்நாட்டில் உள்ள 3 மத்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனங்களை பிற மாநிலங்களில் உள்ள நிறுவனங்களுடன் இணைக்கும் முடிவை மத்திய வேளாண் அமைச்சகம் கைவிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய வேளாண் மந்திரி ராதாமோகன் சிங்குக்கு, பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
சென்னையில் உள்ள மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு நிறுவனத்தை கேரள மாநிலம் கொச்சியிலுள்ள மத்திய கடல்மீன்கள் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல், கோவையில் செயல்பட்டு வரும் கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தை உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள இந்திய கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்துடனும், திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தை கர்நாடகத்திற்கு மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த முடிவுகள் சிக்கனத்தை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டிருக்கின்றனவே தவிர ஆராய்ச்சியை கருத்தில் கொண்டு எடுக்கப்படவில்லை என்பதும், இது வேளாண் ஆராய்ச்சிகளுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்பதும் தான் எனது கருத்து ஆகும். எனவே, தமிழ்நாட்டில் உள்ள 3 மத்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனங்களை பிற மாநிலங்களில் உள்ள நிறுவனங்களுடன் இணைக்கும் முடிவை மத்திய வேளாண் அமைச்சகம் கைவிட வேண்டும். தமிழகத்தில் தற்போதுள்ள வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறியள்ளார்.