நாட்டில் நிலவும் சீரற்ற கால நிலை எதிர்வரும் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் உக்கிரமடையவுள்ளதாக காலநிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது. எனவே குறித்த சீரற்ற கால நிலை தொடர்பில் வடக்கு, கிழக்கு மக்கள் அவதானமாக இருந்துகொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தெற்கு அந்தமான் தீவுகளில் தற்போதைக்கு தாழமுக்கம் ஒன்று உருவாகியுள்ளது. அத்தாழமுக்கம் எதிர்வரும் தினங்களில் உக்கிரமடைந்து மத்திய வங்காள விரிகுடாவினூடாக இந்தியா நோக்கிப் பயணிக்கவுள்ளது. அதற்கிணங்க எதிர்வரும் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் அத்தாழமுக்கம் இலங்கைக்கு கிழக்காக பயணிக்கவுள்ளதாகவும் கால நிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை ஒக்கி (OCKHI) சூறாவளி இலங்கையிலிருந்து மேற்கு திசையில் 850 கிலோ மீற்றர் தொலைவில் அரபுக் கடலில் நிலை கொண்டுள்ளது. அச்சூறாவழியின் தாக்கம் குறைவடைந்த போதிலும் மேல், ஊவா, சப்ரகமுவ ஆகிய மாகாணங்களில் 50 தொடக்கம் 75 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகலாம் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. இதேவேளை இரத்தினபுரி, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் மணிக்கு ஐம்பது கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் அந்நிலையம் எதிர்வுகூறியுள்ளது.
இதேவேளை கடந்த சில தினங்களாக காலி, களுத்துறை, மாத்தறை,மொனராகல, அம்பாந்தோட்டை, கண்டி, நுவரெலிய, இரத்தினபுரி, பதுளை,கம்பஹா,புத்தளம், கேகாலை,மாத்தளை, குருநாகல், கொழும்பு, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் நிலவி வரும் சீரற்ற காலநிலையினால் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் அறுபத்தொரு பேர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளார். அத்துடன் முப்பத்தோராயிரத்து நூற்று அறுபத்தைந்து குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து ஆறாயிரத்து எழுபத்தாறு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த அனர்த்தத்தினால் அறுநூற்று தொன்னூற்று நான்கு வீடுகள் முழு அளவில் சேதமைந்துள்ளதுடன் 25 ஆயிரத்து நூற்றுப் பதினேழு வீடுகள் பகுதியளவில் சேதமைடந்துள்ளன. எனவே பாதிக்கப்பட்ட ஆயிரத்து நானூற்று 21 குடும்பங்களைச் சேர்ந்த ஐயாயிரத்து நானூற்று முப்பத்தைந்து பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
காலி மாவட்டத்தில் எட்டுப்பேர் உயிரிழந்துள்ளதுடன் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். மேலும் ஏழாயிரத்து 44 குடும்பங்களைச் சேர்ந்த 26 ஆயிரத்து 254 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். களுத்துறை மாவட்டத்தில் 23 பேர் காயமடைந்துள்ளதுடன் 14 ஆயிரத்து 29 குடும்பங்களைச் சேர்ச்த 55 ஆயிரத்து 545 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாத்தறை மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் ஆயிரத்து 210 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 743 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொனராகலை மாவட்டத்தில் 72 குடும்பங்களைச் சேர்ந்த 281 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 258 குடும்பங்களைச் சேர்ந்த 945 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கண்டி மாவட்டத்தில் 16 குடும்பங்களைச் சேர்ந்த 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் இருவர் காயமடைந்துள்ளதுடன் 511 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 228 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரத்தினபுரி மாவட்டத்தில் இருவர் காயமடைந்துள்ளதுடன் 380 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 152 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பதுளை மாவட்டத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் 4 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் ஆயிரத்து 320 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 964 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கம்பஹா மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். மேலும் ஆயிரத்து 261 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 961 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். புத்தளம் மாவட்டத்தில் 8 குடும்பங்களைச் சேர்ந்த 27 பேரும், கேகாலை மாவட்டத்தில் 7 குடும்பங்களைச் சேர்ந்த 25 பேரும், மாத்தளை மாவட்டத்தில் 141 குடும்பங்களைச் சேர்ந்த 565 பேரும், குருநாகல் மாவட்டத்தில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 8 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை கொழும்பு மாவட்டத்தில் 14 பேர் காயமடைந்துள்ளதுடன் 4 ஆயிரத்து 316 பேரும் அநுராதபுரம் மாவட்டத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.