எமது தேசத்தின் ஒளிவிளக்கு பாலா அண்ணை!

28685 0

எமது தலைவர் அவர்களை நாம் எல்லோரும் “ அண்ணை“ என்று அன்போட அழைப்போம். ஆனால் எம் தலைவர் அவர்கள் குறிப்பிட்ட சிலரை “அண்ணை“  என அழைப்பது உண்டு. அதைப்பார்த்து எமக்கு ஆச்சரியாமாக இருக்கும். அந்த ஒருவரில் கலாநிதி தேசத்குரல் அன்ரன் பாலசிங்கம் முதன்மையானவராக உள்ளார்.

பாலா அண்ணையின் அரசியல் ஞானத்தை அறிந்து கொள்வதற்கான அறிவு எமக்கு இல்லை. ஆனால் ஒவ்வொரு அரசியல் இராஜதந்திர நகர்வின் போதும் அவர் தலைவர் அவர்களின் அருகில் இருக்கும் போது அதை புரிந்து கொள்வோம்.

நாம் பாலாண்ணையை “அங்கிள்” என்றே அழைப்போம். அவரின் அருகில் எப்போதும் இருக்கும் துணைவியாரை “அன்ரி” என விழிப்போம்.

சமாதான பேச்சுவார்த்தைகளின் போதே கலாநிதி அன்ரன் பாலசிங்கத்தின் ஆளுமையை கண்டு வியந்தோம். தலைவர் அவர்களின் ஊடகவியலாளரின் சந்தின்போது. தலைவர் அவர்களின் அருகிருந்து சாதுரியாகச் செயற்பட்டதை கண்டு அக மகிழ்ந்தோம்.

”சுகந்திரவேட்கை” வாசித்த பின் பாலண்ணையின் விம்பத்தைக் கண்டு பிரமித்துப்போனோம். இது அவரது துணைவியார் அடேல் எழுதிய நூல்.

பாலாண்ணை எழுதிய “ போரும் சமாதானமும்” அவரின் அரசியல் முப்பரிணான அறிவை புரிந்து கொண்டோம். பின் அவரது “ விடுதலை” நூலை விளங்கிக் கொள்ள முடியாது பல தடவைகள் வாசித்து அவரது தத்துவார்த்தத்தை புரிந்து கொள்ள முடிந்தது.

“பாலாண்ணை“ என்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் காலமாகிய போது தலைவர் அவர்களால் வெளியிடப்பட்ட அறிக்கையில் “ எமது சுதந்திர இயக்கத்தின் அரசியல் இராஜதந்திர நகர்வுகளில் எனக்குப் பக்கபலமாக இருந்து செயற்பட்ட எமது தேசத்தின் ஒளிவிளக்கு இன்று அணைந்துவிட்டது. ஆலோசனை வேண்டி, ஆறுதல் தேடி ஓடுவதற்கு பாலாண்ணை இன்று என்னுடன் இல்லை. இவரது மறைவு எனக்கு மாத்திரமல்ல தமிழீழ தேசத்திற்கே இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு.” என குறிப்பிட்டிருந்தார். இதை விட அவரின் இழப்பை இனி எப்படி எழுதுவது?

மேலும் தலைவர் அவர்கள் தனது அறிக்கையின் இறுதியில் “ஈழத்தமிழினம் பெருமைகொள்ளும் வகையில் அரசியல் உலகிலும் இராஜதந்திர உலகிலும் அளப்பெரும் சாதனைகள் புரிந்து, எமது தேசசுதந்திரப் போராட்டத்தை உலக அரங்கில் முன்னிறுத்திய பாலாண்ணையின் மாபெரும் போராட்டப்பணிக்கு மதிப்பளித்து தேசத்தின் குரல் என்ற மாபெரும் கௌரவப்பட்டத்தை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகிறேன். பாலாஅண்ணை உண்மையில் எம்மைவிட்டுப் போகவில்லை. அவர் எமது நினைவலைகளில் என்றும் நீங்காத நினைவுகளாக நிலைத்து நிற்பார்.”  என்றார். எனவே, எம் தலைவர் அவர்கள் குறிப்பிட்டது போல் என்றும் நீங்காத நினைவுகளாக நிலைத்து நிற்பார் பாலாஅண்ணை.

எமது தேசத்தின் ஒளிவிளக்கு அணையவில்லை அந்த ஒளிவிளக்கில் ஒளியேற்றிய தீபங்கள் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன.