14 வயது சிறுமியை கடத்திச் சென்று வீடொன்றில் வைத்து துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய இருவருக்கு தலா 18, 27 வருடங்கள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து கல்முனை மேல்நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க தீர்ப்பளித்தார்.
கடந்த புதன்கிழமை மன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே மேற்படி தீர்ப்பை வழங்கினார்.
திருக்கோவில் பிரதேசத்தை சேர்ந்த சிறுமியை கடந்த 2015 ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்று அட்டாளைச்சேனை சம்புநகர் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் அடைத்து வைத்து இருவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக அப்போது விசாரணை மேற்கொண்ட அக்கரைப்பற்று பொலிஸார் சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்து அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வழக்கு தொடர்ந்தனர். அதன் பின்னர் சட்டமா அதிபரினால் இவ்வருடம் பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி கல்முனை மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு கடந்த ஜூலை மாதம் 17 ஆம் திகதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதை தொடர்ந்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
குற்றத்தை ஒப்புக்கொண்ட எதிரிகளில் 1ஆம் எதிரிக்கு 18 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 20 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் 2 ஆம் எதிரிக்கு 27 வருட கடூழிய சிறைத்தண்டனையும் 40 ஆயிரம் ரூபா தண்டப் பணமும் 4 இலட்சம் ரூபா நஷ்டஈடு வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.
தண்டனை வழங்கப்பட்ட இருவரும் அட்டாளைச் சேனை சம்பு நகர் பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர்.