சுமார் ஒரு இலட்சம் ரூபாவுக்கு அதிகமான பெறுமதியான தங்க, நகைகளை கொள்ளையிட்டு தனது காதலிக்கு பரிசளித்த பௌத்த பிக்கு ஒருவரை ரிதிகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.தான் ஏற்கனவே வசித்து வந்த விகாரை மூடப்பட்டதாக தெரிவித்து வெவ்வேறு விகாரைகளில் தங்கி வந்திருந்த பிக்கு ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.
இவ்வாறு அவர் இடம்பெயர்ந்திருந்து கடந்த ஒரு மாத காலமாக கிரிபத்கல்ல, கந்தே கம பகுதியிலுள்ள விகாரையொன்றில் தங்கியிருந்த நிலையில் அக்கிராமத்திலுள்ள மக்கள் அவருக்கு தேவையான உணவு மற்றும் ஏனைய வசதிகளை செய்து கொடுத்திருந்தனர்.
இவ்வாறு கடந்த 5ஆம் திகதி இந்த பிக்கு தான் தங்கியிருந்த விகாரைக்கு அருகிலுள்ள வீடொன்றிலிருந்த தனது பக்தையொருவரின் அழைப்பின் பேரில் அவரது வீட்டுக்கு சென்றுள்ளார்.
அதன் போது அவ்வீட்டிலிருந்த பெண், பிக்குவை வீட்டினுள் அமரச் செய்து அவரை சம்பிரதாயபூர்வமாக வரவேற்பதற்கு தனது வீட்டிக்கு வெளியில் வெற்றிலை பறித்து வர சென்றுள்ளார்.
அவ்வேளையில் வீட்டிலுள்ள அறை ஒன்றுக்குள் நுழைந்து அங்கிருந்த அலுமாரி ஒன்றை திறந்த சந்தேக நபரான பிக்கு, அதிலிருந்த நகைப்பெட்டகமொன்றை களவாடி அவ்வீட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதனையடுத்து குறித்த வீட்டார் மேற்கொண்ட முறைப்பாட்டினையடுத்து சந்தேக நபரான பிக்கு கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
இவ்விசாரணைகளின் மூலம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் பிக்குவின் காதலியென கூறப்படும் நாவுல பிரதேசத்தை சேர்ந்த 52 வயதான பெண்ணொருவரும், மாத்தளை நகரிலுள்ள நகை வர்த்தகரொருவரும் திருட்டு நகைகளை வைத்திருந்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டி ருந்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் ரிதிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.