அ.தி.மு.க. கொடி விவகாரத்தில் டி.டி.வி.தினகரன் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனுடன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்யவந்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நாங்கள் 5 பேருக்கு மேல்செல்லவில்லை. ஆனால் டி.டி.வி.தினகரன் தன்னுடைய ஆட்கள் 200 பேருடன் வந்து இருக்கிறார். தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறி இருக்கிறார். இதுதொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாங்கள் புகார் அளித்துள்ளோம்.
தேர்தல் ஆணையம் உள்ளங்கை நெல்லிக்கனி போல தெளிவான தீர்ப்பு வழங்கி இருக்கிறது. அ.தி.மு.க. நாங்கள் தான். தேர்தல் ஆணையத்தின் தீர்ப்புக்கு எதிராக டி.டி.வி.தினகரன் கொடியை உபயோகப்படுத்துவது சட்டவிரோதம். அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.
அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம். டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க. வின் அடிப்படை உறுப்பினரே கிடையாது. பிறகு எப்படி அவர் கொடிக்கு உரிமை கொண்டாட முடியும்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் சின்னமான இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளருக்கு எதிராக போட்டியிட டி.டி.வி.தினகரனுக்கு என்ன அருகதை இருக்கிறது.
ஆர்.கே.நகர் தொகுதியில் மகத்தான வெற்றி பெறுவோம். வெங்காயம் உரிக்க உரிக்க ஒன்றும் இல்லாமல் இருப்பதுபோல, டி.டி.வி.தினகரனும் ஒன்றும் இல்லாமல் போய்விடுவார். எங்களுக்கும் தி.மு.க.வுக்கும் தான் போட்டி. டி.டி.வி.தினகரனை ஒரு பொருட்டாக கருதவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.