மிலாது நபி திருநாளை இஸ்லாமிய பெருமக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனும், மன நிறைவுடனும் கொண்டாடிட, கருணாநிதி சார்பிலும் தி.மு.க.வின் சார்பிலும் வாழ்த்து தெரிவித்துக்கொள்வதாக மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-
நபிகள் நாயகம் அவதரித்த திருநாளை அக மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் தலைவர் கருணாநிதி சார்பிலும், தி.மு.க.வின் சார்பிலும் இதயம் கனிந்த மிலாது நபி நல்வாழ்த்துகளை மன மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
நபிகள் நாயகம் பிறந்த இந்த நன்னாளை மன நிறைவுடன் கொண்டாட வேண்டும் என்ற அடிப்படையில் 1969 ஆம் ஆண்டு முதல்-அமைச்சராக முதன்முதலாக பொறுப்பேற்ற தலைவர் கருணாநிதி “மிலாது நபி” திருநாளை அரசு விடுமுறையாக அறிவித்தார். ஆனால், அ.தி.மு.க. அரசு 2001-ல் அதனை ரத்து செய்ததையும், பிறகு 2006-ல் தி.மு.க. மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றதும் விடுமுறை வழங்கப்பட்டதையும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் நன்கு அறிவர்.
ஆகவே, மிலாது நபி திருநாளை இஸ்லாமிய பெருமக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனும், மன நிறைவுடனும் கொண்டாடி, “அன்பு, சகோதரத்துவம், அமைதி” நிறைந்த இந்திய திருநாட்டின் பன்முகத் தன்மையைப் போற்றிப் பாதுகாத்திட இந்த “மிலாது நபி” திருநாளில் சபதம் ஏற்போம் என்று கூறி, அனைத்து இஸ்லாமிய பெருமக்களுக்கும் மீண்டும் ஒருமுறை எனது மிலாது நபி நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.