பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸூகர்பெர்க்கின் சகோதரிக்கு அமெரிக்க விமானத்தில் பயணி ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பேஸ்புக் நிறுவனரான மார்க் ஸூகர்பெர்க்கின் சகோதரியும் பேஸ்புக் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகியுமான ரண்டி ஸூகர்பெர்க் சமீபத்தில் தனக்கு விமானத்தில் நடந்த மோசமான அனுபவத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார். அத்துடன் சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்திற்கும் புகார் கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து மெக்சிகோவின் மசட்லான் நகருக்கு அலாஸ்கா விமானத்தில் பயணம் செய்தேன். அப்போது என் இருக்கைக்கு அருகில் அமர்ந்து பயணம் செய்த நபர், என்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டார்.
குடிபோதையில் இருந்த அந்த நபர் பாலியல் தொடர்பாகவும் ஆபாசமாகவும் பேசியதுடன், விமானத்தில் இருந்த மற்ற பெண் பயணிகளின் அங்க அசைவு குறித்தும் வர்ணித்தார்.
இதுபற்றி விமான பணியாளர்களிடம் புகார் கூறினேன். ஆனால் அந்த நபர் வழக்கமாக அந்த வழித்தடத்தில் பயணம் செய்பவர் என்பதால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தனிப்பட்ட முறையில் இதனை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கூறியதுடன், எனது இருக்கையை பின்புறம் மாற்ற முன்வந்தனர். பாதிக்கப்பட்ட நான் ஏன் வேறு இருக்கைக்கு மாற வேண்டும்?இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
அவரது புகாரின் அடிப்படையில் விசாரணையை தொடங்கியிருப்பதாக அலாஸ்கா ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. மேலும், புகார் குறித்து ரண்டி ஸூகர்பெர்க்கை தொடர்பு கொண்டு பேசியிருப்பதாகவும், விசாரணை அறிக்கை வெளிவரும் வரை குற்றம்சாட்டப்பட்ட நபரின் பயண சலுகைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.