ஜெயலலிதாவுக்கும் சோபன்பாபுவுக்கும் பிறந்த மகள் என்று உரிமை கோரிய அம்ருதாவுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்ததால் அவர் தலைமறைவாகி இருந்தார். இந்த நிலையில் அவர் நேற்று பெங்களூரு திரும்பி விட்டார்.
கடந்த சில மாதங்களாக தம்மை ஜெயலலிதா- சோபன்பாபு மகள் என்று உரிமை கொண்டாடி வரும் அம்ருதா இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். அம்ருதா தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. அத்துடன் கர்நாடகா ஐகோர்ட்டில் முறையிடவும் அறிவுறுத்தியது. இதற்கிடையே ஜெயலலிதாவின் உறவினர்கள், நட்பு வட்டாரங்கள் அனைவருமே சொல்லி வைத்தாற்போல, ஜெயலலிதாவுக்கும் சோபன்பாபுவுக்கும் பிறந்தது பெண் குழந்தை என்று கூறி வந்தனர். அம்ருதாவும் திடீரென தலைமறைவாகி இருந்தார்.
தொடர்ச்சியாக கொலை மிரட்டல்கள் வருவதைத் தொடர்ந்தே அவர் தலைமறைவாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டது. ஜெயலலிதா உறவினர்களே அம்ருதாவுக்கு ஆதரவாக இருக்கும் போது கொலை மிரட்டல் விடுத்தது யார் என்பது குறித்து உளவுத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அம்ருதா நேற்று பெங்களூரு திரும்பி விட்டார். அவர் தந்தி டி.விக்கு ஒரு ஓட்டலில் பேட்டி அளித்தார். பின்னர் காரில் ஏறி வீட்டுக்கு சென்று விட்டார்.
அம்ருதா வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அடுத்த வாரம் பெங்களூரு ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்ய உள்ளார். தன்னை ஜெயலலிதா மகள் என்று அறிவிக்கக்கோரியும், டி.என்.ஏ. பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் அவர் குறிப்பிட உள்ளார்.
அம்ருதா பொய் சொல்வதாகவும், அவர் மீது போலீசில் புகார் செய்ய இருப்பதாகவும் தினகரன் ஆதரவாளர் புகழேந்தி அறிவித்து உள்ளார்.
அம்ருதா யார் என்றே தனக்கு தெரியாது என்றும், ஜெயலலிதாவுக்கு மகளே கிடையாது என்றும் தினகரன் கூறினார்.
அம்ருதாவுக்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் கண்டனம் தெரிவித்து உள்ளார். அம்ருதா பொய் சொல்லி ஏமாற்றி விட்டதாகவும் அவர் மீது வழக்கு தொடரப்போவதாகவும் தீபா கூறி இருக்கிறார்.