மேல் மாகாணத்தில் வீதிகளில் திரியும் கட்டாக்காலி மாடுகளை அப்புறப்படுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவை கால்நடை காப்பகங்களில் விடப்படும் எனவும் பாரிய நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். பராமரிப்பாளர் இல்லாத 689 மாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பாரிய நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
வீதிகளில் திரியும் கட்டாக்காலி மாடுகளினால் குறிப்பாக நகர் புறங்களில் பாரிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. பிரதான வீதிகளில் அதிகாலையில் இவ்வாறு நடமாடும் மாடுகளினால் வாகன விபத்துக்கள் பலவும் பதிவாகியுள்ளன. அதேபோல் மாடுகளுக்கான சரியான உணவுகள் கிடைக்காத நிலையில் பொலித்தீன் பைகளை உண்பதனால் இறக்கும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது. ஆகவே இந்த செயற்பாடுகளுக்கு தீர்வு ஒன்றை பெற்றுக்கொள்ள வேண்டும். நகர்ப்புறங்களில் கட்டாக்காலியாக திரியும் மாடுகள் மற்றும் உரிமையாளர்கள் இருந்தும் பராமரிக்கப்படாத மாடுகளை உடனடியாக நகர்ப்புறங்களில் இருந்து அப்புறப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எம்பிலிப்பிட்டிய பகுதியில் உள்ள கால்நடை காப்பகங்களில் இவை விடப்படும். அங்கு மாடுகளுக்கான உணவுகள் வழங்கப்படுவதுடன் முறையான பராமரிப்பும் இடம்பெறும். அத்துடன் இந்த மாடுகளை கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. முறையாக பராமரிப்பை கையாளும் விவாயிகள் தாம் இந்த மாடுகளை பெற்றுக்கொள்ள முடியும்.
அதேபோல் கொழும்பில் மாடுகளை வளர்க்க சிரமப்படும் நபர்கள் எமது அமைச்சில் மாடுகளை கையளிக்க முடியும். எவ்வாறு இருப்பினும் இம்மாதம் 15 ஆம் திகதியில் இருந்து இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.