உள்ளூராட்சி சபைத் தேர்தல் அனைத்தும் ஒரே தினத்தில் இடம்பெறுவது ஆரோக்கியமான விடயமாகும். முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு தவிர்ந்த ஏனைய அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் புதிய முறையில் தேர்தல் நடத்தப்படும் என பாரிய நகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கடந்தகால ஊழல் குற்றங்களை கண்டறிவதில் இந்த அரசாங்கம் பின்வாங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
பாரிய நகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் அனைத்தும் ஒரே தினத்தில் நடத்தப்பட வேண்டும் என்பதே ஐக்கிய தேசிய முன்னணியின் நிலைப்பாடாகும். எனினும் கடந்த காலங்களில் தேர்தலை நடத்துவதில் சில குழப்பங்கள் ஏற்படுத்தப்பட்ட போதிலும் தற்போது ஒரே தினத்தில் சகல தேர்தல்களையும் நடத்தவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கட்சி தலைவர்கள் கூட்டத்தில் ஏகமனதாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க ஆரோக்கியமான விடயமாகும். புதிய தேர்தல் முறைமை கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் புதிய முறைமையில் தேர்தல் நடத்தப்படும். எனினும் புதுக்குடியிருப்பு மற்றும் முல்லைத்தீவு ஆகிய பிரிவுகளில் யுத்தத்தின் பின்னர் மக்கள் குடியமர்த்தப்பட்டதில் ஏற்பட்ட தாமதங்கள் காரணமாக எல்லை நிர்ணயம் செய்யப்படவில்லை. எனவே இந்த இரண்டு பகுதிக்கும் பழைய முறைமையில் தேர்தல் நடத்தப்படும். ஏனைய சகல பகுதிகளுக்கும் புதிய முறைமையில் தேர்தல் நடத்தப்படும்.
மேலும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவை கைது செய்வது குறித்தும் நாம் பழிவாங்க முயற்சிப்பதாகவும் சிலர் தெரிவிக்கும் கருத்துக்கள் அடிப்படை உண்மை அற்றதாகும். எமக்கு யாரையும் பழிவாங்க வேண்டிய அவசியம் இல்லை. எனினும் ஊழல், குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்காது இருக்கவும் முடியாது. ராஜபக் ஷ அமைப்பினால் எமது அமைச்சுக்கு 560 இலட்சம் ரூபாய் வழங்க வேண்டும். இவற்றை சட்ட ரீதியில் பெற்றுக்கொள்ள வேண்டும். அதேபோல் கடந்த கால ஊழல்கள் குற்றங்கள் குறித்து அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுக்கவில்லை அல்லது விசாரணைகளை முன்னெடுப்பதில் பின்வாங்குவதாக மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர். அதை மறுக்கவும் முடியாது. ஆகவே முன்னைய ஆட்சியாளர் குடும்ப ஆட்சியாளர்கள் செய்த தவறுகள் குறித்து சட்டமுறைப்படி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதில் நாமும் உறுதியாக உள்ளோம்.
எமது ஆட்சியில் ஊழல்கள் இடம்பெறவில்லை என கூறவில்லை, எனினும் எமது ஆட்சியில் செய்துள்ள ஊழல் குற்றங்கள் குறித்தும் சட்ட முறைப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஊழல்களை ஒரே நேரத்தில் தடுத்துவிட முடியாது. எனினும் நாம் ஊழல் இல்லாத ஆட்சியை உருவாக்கும் வகையில் சகல தரப்பினருக்கும் அதி காரங்க ளை கொடுத்து ஊடக சுதந்திரத்தை வழங்கிசுயாதீனத்தை ஏற்படுத்தி உண்மைகளை வெளிப்படுத்தக்கூடிய சூழலை உருவாக் கியுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.