நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாட்டை அரசாங்கம் தாமதித்தாலும் அதனை முன்னெடுக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இன்னும் இருக்கின்றது. கூட்டு எதிரணி மிகவும் பலமாக செயற்படுகின்றமையின் காரணமாக அரசாங்கம் இந்த விடயத்தில் தயக்கத்தை காட்டுகின்றது என்று தேசிய சமாதான பேரவையின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவித்தார்.
காணாமல் போனோர் குறித்து ஆராயும் அலுவலகத்துக்கான ஆணையாளர்களை நியமிக்கும் சாத்தியம் இருந்தும் அதனை அரசாங்கம் தாமதிக்கின்றது. பெரும்பாலும் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவடைந்ததும் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நான் நம்புகின்றேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கம் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் செயற்பாட்டை தாமதிக்காமல் விரைந்து முன்னெடுக்கவேண்டும் என்று சர்வதேசம் தெரிவித்து வருகின்றமை தொடர்பில் விபரிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,
நல்லாட்சி அரசாங்கம் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாட்டை வாக்குறுதியளித்தபடி முன்னெடுக்கும் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது. அதாவது இந்த செயற்பாடுகள் தாமதம் அடைந்தாலும் முன்னெடுக்கப்படும் என்ற நம்பிக்கை வலுவாகவே உள்ளது.
அதாவது நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாடு தொடர்பில் புரிந்துகொண்டுள்ள அரசாங்கத்தின் தலைமையே தற்போது பதவியில் உள்ளது. நல்லிணக்கம் எந்தளவு தூரம் முக்கியத்துவம் மிக்கது என்பதனை இந்த அரசாங்கம் புரிந்துகொண்டுள்ளது.
ஆனால் கூட்டு எதிரணி மிகவும் பலமான முறையில் செயற்படுவதன் காரணமாக அரசாங்கத்தினால் இந்த செயற்பாடுகளை சரியான முறையில் முன்னெடுக்க முடியாத நிலைமை காணப்படுகின்றது. காணாமல் போனோர் குறித்து ஆராயும் அலுவலகத்துக்கான ஆணையாளர்களை நியமிக்கும் சாத்தியம் இருந்தும் அதனை அரசாங்கம் தாமதிக்கின்றது.
அத்துடன் உண்மையை கண்டறியும் ஆணைக்குழு மற்றும் நட்டஈடு வழங்கும் அலுவலகம் என்பனவற்றை அமைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளபோதிலும் அவற்றை சட்டமாக்குவதற்கு அரசாங்கம் தயங்குகின்றது.
காரணம் தற்போது உள்ளூராட்சிமன்றத் தேர்தலும் நடைபெறவிருப்பதால் நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்களை அரசாங்கம் மேலும் தாமதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. காரணம் தற்போதைய சூழலில் காணாமல் போனோர் அலுவலகத்துக்கு ஆணையாளர்களை நியமித்தால் எதிர்க்கட்சிகள் அதனை வேறுவிதமாக தேர்தல் காலத்தில் பிரசாரம் செய்ய ஆரம்பித்துவிடும்.
எனவே அரசாங்கத்துக்கு இந்த சூழலில் காணப்படுகின்ற சவால்களையும் நாங்கள் புரிந்துகொள்ளவேண்டும். நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் முன்னெடுக்கவேண்டிய தேவை அரசாங்கத்துக்கு காணப்பட்டாலும் எதிர்க்கட்சிகள் அதனை மக்கள் மத்தியில் வேறுவிதமாக பிரசாரம் செய்துவிடும் என்ற அச்சமும் உள்ளது. குறிப்பாக தேர்தல் காலத் தில் குழப்பம் ஏற்பட்டுவிடும் என்று அரசாங்கம் கருதலாம்.
ஆனால் நல்லிணக்கம் மற்றும் பொறுப் புக்கூறலை முன்னெடுக்க வேண்டும் என்ற தேவையும் அரசாங்கத்துக்கு உள்ளது. எனவே தாமதித்தாவது இந்த செயற் பாட்டை அரசாங்கம் முன்னெடுக்கும் என்று நம்புகின்றோம் என்றார்.