வடக்கு மாகாணத்தில் இயங்கும் தனியார் கல்வி நிலையங்கள் பிற்பகல் 6 மணிக்குப் பின்னரும் காலை 6 மணிக்கு முன்னரும் செயற்படுவதை நிறுத்தவும் ஞாயிறு தினங்களில் விடுமுறை வழங்கவும் மிக விரைவில் நியதிச் சட்டத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது:
வடக்கு மாகாணத்தில் இயங்கும் தனியார் கல்வி நிலையங்கள் வெள்ளி மற்றும் ஞாயிறு தினங்களில் விடுமுறை வழங்க வேண்டும் எனவும் நேரம் தொடர்பாகவும் பலதரப்பினராலும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது. இந்த விடயத்தை நானும் வலியுறுத்துகின்றேன்.
எமது மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் பெற்றோர்களின் முகங்களைக் கூடப் பார்க்க முடியாது தனியார் கல்வி நிலையங்க ளுக்குச் செல்கின்றனர். வாரத்தில் விடுமுறையான தினமும் மாணவர்கள் ஓய்வு இல்லாது இவ்வாறு தனியார் கல்வி நிலையங்களுக்குள் இருப்பதை ஏற்க முடியாது.
அவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டில் இருந்து படிக்கின்றார்களோ, விளையாடுகின்றார்களோ எதுவாயினும் அவர்கள் வீட்டில் பெற்றோருடன் ஓய்வாக இருக்க வேண்டும். ஆகவே அன்றைய தினத்தில் எந்த வகுப்புகளையும் நடத்தத் தடை விதிக்கப்படும் வகையில் நியதிச் சட்டம் உருவாக்கப்பட்டு வருகின்றது.தவற விடாதீர்கள்: பேருந்து சேவை ஊழியா்களின் போராட்டம் கைவிடப்பட்டது
நாம் கொண்டு வரவுள்ள நியதிச் சட்டத்தின் ஊடாக தனியார் கல்வி நிலையங்களைக் கட்டுப்படுத்துவதுடன் மட்டுமல்லாது மாணவர்களுக்கான ஒழுக்கக் கோவையும் உருவாக்கப்படவுள்ளது. அவற்றின் ஊடாக எமது மாணவர்களின் ஒழுக்கம், கலாசாரம் பேண நடவடிக்கை எடுக்கப்படும்–என்றார்.இவை தொடர்பான கோரிக்கை ஒன்றை வடக்கு மாகாண சபையின் 93 ஆவது அமர்வில் சர்வேஸ்வரன் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.