இலங்கைக்கு அருகில் உருவாகி இருந்த ஒக்கி சூறாவளி, கொழும்பில் இருந்து மேற்கு திசையில் 600 கிலோமீற்றருக்கு அப்பால் சென்றிருப்பதாக வானிலை அவதான நிலையம் சிறப்பு வானிலை அறிக்கையொன்றை வௌியிட்டு குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும் , இன்றைய தினத்திலும் சில மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை எதிர்ப்பார்க்கப்படுவதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
மேல் , தென் மற்றும் சப்ரகமுவ போன்ற மாகாணங்களில் சில நேரங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை சீரற்றக் காலநிலையால் பலியான மீனவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் நட்டஈடு வழங்கப்படவுள்ளது.
மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் எட்டு மீனவர்கள் இன்னும் காணாமல் போய் இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் பதுளை, ரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
பதுளை மாவட்டத்தில் மண்சரிவு அச்சம் காரணமாக 590 பேர் மாற்று இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மையம் அறிவித்துள்ளது.
அத்துடன் இரத்தினபுரி, பதுளை பிரதான வீதியில் ஹப்புத்தளை – பெரகலை மற்றும் ஹல்துமுல்லை ஆகிய பகுதிகளில் மண் மற்றும் கற்சரிவுகள் இடம்பெற்றுள்ளன.