நான் வேண்டும் என்றே ட்ரம்பின் ட்விட்டர் கணக்கை முடக்கவில்லை அது தவறுதலாக நடந்த நிகழ்வு என்று நவம்பர் 2-ம் தேதி ட்ரம்பின் ட்விட்டர் கணக்கை முடக்கியவர் என்று கருதப்படும் இளைஞர் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்விட்டர் கணக்கு நவம்பர் மாதம் 2-ம் தேதி 10 நிமிடங்கள் தற்காலிகமாக செயலிழந்து இருந்தது.
பின்னர் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கு மீண்டும் செயல்பட துவங்கியது.
இந்த சம்பவத்தை குறிப்பிட்டு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது ட்விட்டர் கணக்கு ஒன்றுக்கும் உதவாத ஊழியரால் முடக்கப்பட்டது” என்று பதிவிட்டிருந்தார்.
இதற்கு ட்விட்டர் நிர்வாகம் தரப்பில் அதிபர் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கு கவனக்குறைவால் ஊழியர் ஒருவரது தவறுதலால் முடக்கப்பட்டது என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
அந்த ஊழியர் குறித்து எந்தவித விவரத்தையும் ட்விட்டர் நிர்வாகம் வெளியிடாமல் இருந்தது.
இந்த நிலையில் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கை முடக்கிய இளைஞர் பட்தியார் ட்யூஸக் என்ற ஜெர்மனி இளைஞர் என்று தெரிய வந்துள்ளது.
இவர் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரிலுள்ள ட்விட்டர் தலைமையகத்தில் வாடிக்கையாளர் உதவி பிரிவில் பணி செய்து வந்திருக்கிறார்.
ட்ரம்பின் ட்விட்டர் முடக்கம் குறித்து ட்யூஸக் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில், ”என்னுடைய கடைசி நாள் பணியின்போது அதிபர் ட்ரம்பின் கணக்கை ஏதோ கவனக்குறைவால் தவறுதலாக முடக்கிவிட்டிருக்கிறேன்.
நான் வேண்டும் என்றே அதனை செய்யவில்லை. எல்லோரும் ஒரு கட்டத்தில் சோர்வடைவார்கள். எல்லோரும் ஒரு கட்டத்தில் தவறும் செய்வார்கள். நான் யாருடைய ட்விட்டர் கணக்கையும் ஹேக் செய்யவில்லை. அதற்கு எனக்கு அனுமதியும் கிடையாது” என்று கூறியுள்ளார்.
ட்ரம்பின் ட்விட்டர் கணக்கை முடக்கியதற்காக ட்யூஸக்குக்கு சமூக வலைதளங்களில் பலரும் வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.