பழனிசாமி, பன்னீர்செல்வம் அணிக்கு இரட்டை இலை சின்னம்:தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து சசிகலா, தினகரன் தரப்பில் வழக்கு; டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

416 0

இரட்டை இலை சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம், கே.பழனிசாமி அணிக்கு வழங்கி தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் சசிகலா, டிடிவி தினகரன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து கடந்த 23-ம் தேதி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சசிகலா, டிடிவி தினகரன் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதி கீதா மிட்டல், நீதிபதி சி.ஹரிசங்கர் ஆகியோரைக் கொண்ட முதல் அமர்வில் தினகரன் தரப்பு மூத்த வழக்கறிஞர் கீர்த்தி உப்பல், வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி ஆகியோர் நேற்று ஆஜராகி முறையீடு செய்தனர்.

‘‘இரட்டை இலை சின்னம் தொடர்பாக எங்களது தரப்பில் எடுத்து வைக்கப்பட்ட வாதத்தையும், ஆவணங்களையும் தேர்தல் ஆணையம் முறையாக பரிசீலிக்காமல், இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ், பழனிசாமி அணிக்கு வழங்கியுள்ளது. அதிமுகவின் சட்ட விதிகளின்படி தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு செல்லாது. எனவே, நவம்பர் 23-ம் தேதி தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அத்துடன் அவைத் தலைவர் மதுசூதனன், முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எம்எல்ஏ செம்மலை ஆகியோருக்கு எதிராகவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இதுதொடர்பாக நாங்கள் தாக்கல் செய்துள்ள மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும்’’ என்றனர். இந்த ஏற்ற நீதிபதிகள், மனுவை நாளை (இன்று) விசாரிப்பதாக தெரிவித்தனர்.

இதற்கிடையே, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் தனித்தனியாக கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த மனுக்களில், இரட்டை இலை சின்னம்தொடர்பாக தினகரன் தரப்பில் ஏதேனும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தால் அந்த வழக்கின் விசாரணையில் தங்களது தரப்பு வாதத்தையும் கேட்ட பிறகே எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டும் என கோரியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment