காணாமல் போன நீர்மூழ்கி கப்பலை தேடுவதை கைவிடுவதாக அர்ஜென்டினா அறிவிப்பு

308 0

44 குழு உறுப்பினர்களுடன், இரண்டு வாரங்களுக்கு முன் காணாமல் போன நீர்மூழ்கி கப்பலை தேடும் பணியை கைவிட்டு விட்டதாக அர்ஜென்டினா கடற்படை தெரிவித்துள்ளது.

“தீவிர முயற்சிக்கு பின்னரும், நீர்மூழ்கி கப்பலை கண்டுபிடிக்க முடியவில்லை” என கடற்படையின் பிரதிநிதியான என்ரீகே பால்பி கூறினார்.

காணாமல் போன நீர்மூழ்கி கப்பலான ஆரா சன் குவான், கடைசியாக நவம்பர் 15 ஆம் தேதியன்று தொடர்பில் இருந்தது.

கடைசியாக கப்பல் இருந்த இடத்தின் அருகே வெடிப்பு நடந்திருக்கக்கூடும் என எழுந்த சந்தேகத்தையடுத்து, அதில் உள்ளவர்கள் உயிருடன் இருப்பதற்கான நம்பிக்கை குறைந்தது.

தேடும் பணியை நிறுத்த முடிவு செய்யப்பட்டது ஏன்?

குழுவினரை உயிருடன் மீட்கும் சாத்தியக்கூறுகள் இல்லாததையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, கேப்டன் பால்பி தெரிவித்தார்.

குழவினரின் விதி என்ன என்று தெரியவில்லை என்றும் அதோடு, “நீர்மூழ்கி காணாமல் போன பகுதிகளில், விபத்துக்கான எந்த ஆதாரத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை” என்றும் அவர் கூறினார்.

தற்போது “சூழ்நிலை மாறிவிட்டதாக” தெரிவித்த பால்பி, ஆரா சன் குவான் காணாமல் போனது என்று கருதப்படும் பகுதியில், கடலுக்கடியில் கப்பலின் சிதைவு ஏதாவது உள்ளதா என்பதை பல கப்பல்களும், மற்ற சில நீர்மூழ்கி கப்பல்களும் தீவிரமாக தேடி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment