கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் நாற்பத்தைந்து பேரின் பாராளுமன்ற உறுப்புரிமையை நீக்குவதற்கு அரசாங்கம் சூழ்ச்சி செய்து வருகிறது. எனினும் அவ்வாறான நிலை ஏற்பட்டால் அதனை அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் எதிர்கொள்வதற்கு கூட்டு எதிர்க்கட்சி தயாராக உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று பொரளையிலுள்ள என்.எம். பெரேரா நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நல்லாட்சி அரசாங்கம் கூட்டு எதிர்க்கட்சி மீது அச்சம் கொண்டுள்ளது. அதனால்தான் கூட்டு எதிர்க்கட்சியை அடக்குவதற்கு முயற்சிக்கிறது. எனவே கூட்டு எதிர்க்கட்சியில் இணைந்திருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் உடன்படிக்கை ஒன்றுக்கு வராதவிடத்து அவர்களை பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அச்சுறுத்தல் விடுக்கின்றனர்.
குறித்த உறுப்பினர்கள் உடன்படிக்கைக்கு வராதவிடத்து அவர்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேற்றி, அதன் பின்னர் அவர்களின் தொகுதிகளில் சிக்கல் நிலையை கொண்டுவந்து பாராளுமன்ற உறுப்புரிமையை நீக்குவதற்கு எதிர்பார்த்துள்ளனர்.
மக்களினால் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் நாற்பத்தைந்து பேரை பாராளுமன்றிலிருந்து வெளியேற்றுவது இலகுவான விடயமல்ல. மேலும் அரசாங்கம் மக்களின் அபிப்பிராயங்களுக்கு ஒருபோதும் செவிசாய்ப்பதாக இல்லை. மக்களினால் நிராகரிக்கப்பட்ட 10 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பாராளுமன்றில் தற்போதும் அங்கம் வகிக்கின்றனர். இவ்வாறான நிலையில் மேலும் மக்களினால் தெரிவுசெய்யப்பட்ட 45 உறுப்பினர்களை பாராளுமன்றிலிருந்து விலக்கிவிட்டு அதற்குப் பதிலாக மக்கள் நிராகரித்த உறுப்பினர்களை உள்வாங்குவதற்கு எதிர்பார்த்துள்ளனர்.
ஆகவே மக்கள் தொடர்பில் கரிசனை காட்டும் உறுப்பினர்களை பாராளுமன்றில் வைத்திருப்பதற்குப் பதிலாக அரசாங்கத்திற்கு முட்டுக்கொடுக்கும் உறுப்பினர்களை பாராளுமன்றில் வைத்திருப்பதற்கே அரசாங்கம் முனைகிறது.
கூட்டு எதிர்க்கட்சியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை அச்சமூட்டி அவர்களை உடன்பாட்டுக்கு கொண்டுவர முடியாது என்பதை அரசாங்கத்திடம் கூறிக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.