நீதி கேட்டு நிமிர்கிறது ஈழம் – புகழேந்தி தங்கராஜ்

522 0

lasanthaஆங்கிலத்தில் நல்ல பழமொழிகள் எவ்வளவு இருக்கிறதோ அதே அளவுக்கு மோசமான பழமொழிகளும் இருக்கின்றன. ‘பிரபலமாவதற்கு இரண்டே வழிதான் இருக்கிறது’ என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கிறது அவற்றிலொன்று! “உனக்கு அறிவு இருக்கிறதா…. அப்படியெனில் அந்த அறிவாற்றலை உலகறியச் செய்து பிரபலமாகு! அது (அறிவு) இல்லாதபட்சத்தில் உன்னை நீயே தியாகம் செய்துகொள்வதன் மூலமாவது பிரபலமாக முயற்சி செய்” என்று போதிக்கிறது அது. (சர்ச்சிலுக்கு மட்டுமில்லை பிரிட்டிஷ்காரர்கள் அத்தனைப் பேருக்குமே நாக்கு தடிமன்தான் போலிருக்கிறது.)

2009 ஜனவரி 29ம்தேதி இலங்கையில் நடந்துகொண்டிருந்த தமிழினப் படுகொலையை எப்படியாவது தடுத்து நிறுத்தவேண்டும் என்பதற்காகவே சென்னை சாஸ்திரி பவன் முன் தன் உயிரைத் தியாகம் செய்தானே முத்துக்குமார் என்கிற வீரத்தமிழ்மகன்…. அவன் அறம்சார் அறிவுடன் தெள்ளத்தெளிவாக ஒரு மரணசாசனத்தை எழுதிவைத்துவிட்டுத்தான் தன்னைத்தானே தீக்கு இரையாக்கினான். தேர்ந்த அரசியல் அறிவுடன் தெளிவான தமிழில் எழுதியிருந்தான் அதை! அவன் எழுதாத எதையும் எங்களில் யாரும் எழுதிவிடவில்லை இன்றுவரை!

முத்துக்குமாரின் வீரமரணத்துக்கு சரியாக மூன்று வாரங்கள் முன் 2009 ஜனவரி 8ம் தேதி கொழும்பு நகரின் நடுவீதியில் சுட்டுக்கொல்லப்பட்ட சிங்கள ஆங்கிலப் பத்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்கவும் தன்னுடைய மரணசாசனத்தை முன்னதாகவே எழுதிவைத்திருந்தார். தன்னுடைய தாய்நாடு ஒன்றுதான் சொந்த நாட்டு மக்கள்மீதே விமானத்திலிருந்து குண்டுவீசுகிற கொடுமையான செயலில் ஈடுபடுகிறது – என்று வெளிப்படையாகவும் தெளிவாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார் லசந்த. அதற்காகத்தான் கோதாவின் கூலிப்படையால் குறிவைத்துத் தாக்கப்பட்டார்.

மிருகத்தனமான இலங்கை ராணுவத்தின் கோரமுகத்தை அம்பலப்படுத்துவதற்காகத் தன்னைத்தானே தீக்கிரையாக்கிக் கொண்டான் முத்துக்குமார். அதை அம்பலப்படுத்தியதற்காகவே உயிரைப் பறிகொடுத்தார் லசந்த. தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வது அவர்களது நோக்கமாக ஒருபோதும் இருக்கவில்லை.

லசந்த முத்துக்குமார் இருவருமே ‘நமக்கெதற்கு வம்பு’ என்று விலகிச் செல்லாத பொறுப்புள்ள பத்திரிகையாளர்கள். கண்ணெதிரில் கொல்லப்பட்ட ஓர் இனத்தை எப்படியாவது காப்பாற்றவேண்டும் என்கிற அப்பழுக்கற்ற நோக்கம்தான் உயிரைத் துச்சமாக நினைத்த அவர்களது ஓர்மத்துக்கு அடிப்படையாக இருந்தது.

அந்த இருவருடன் சேர்த்துத் தமிழினத்தால் கொண்டாடப்பட வேண்டிய இன்னொரு (சிங்கள) பத்திரிகையாளன் – பிரகீத் ஏக்னலிகொட. தமிழ் மக்கள் மீதான தாக்குதலில் தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களை தனது தாய்நாடான இலங்கை பயன்படுத்தியதை முதல் முதலில் அம்பலப்படுத்திய பத்திரிகையாளன் பிரகீத்தான்! எப்படி விட்டுவைப்பார்கள் அவனை? 2010 ஜனவரியில் பிரகீத் காணாமல் போய்விட்டான். இன்றுவரை தேடிக் கொண்டிருக்கிறார்கள்!! பிரகீத் இருக்கிறானா இல்லையா என்பதே இதுவரை தெரியவில்லை.

தமிழ் மக்கள் மீதான கண்மூடித்தனமான கொடிய தாக்குதலைக் கண்டித்த ஒரே காரணத்துக்காக பிரகீத் மீது – ‘விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்’ என்கிற முத்திரை குத்தப்பட்டது. பிரகீத் காணாமல் போய் 6 ஆண்டுகள் முடிந்துவிட்டன. ‘பிரகீத் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் இல்லை’ என்பதையே இப்போதுதான் கண்டுபிடித்திருக்கிறது இலங்கை. ‘பிரகீத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’ என்று இலங்கை ரகசியப் புலனாய்வுப் பிரிவு இந்த வாரத் தொடக்கத்தில் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது. (இதன்மூலம் தனது கூற்றைத் தானே மறுத்து சாதனை படைத்திருக்கிறது இலங்கை.)

பிரகீத் பற்றிய இந்த ‘நூதன’ கண்டுபிடிப்பை ஒரு விளாசி விளாசியிருக்கிறார் COLOMBO TELEGAPH வாசகர் ஒருவர். ‘சென்ற அரசு தனக்கு வேண்டப்படாதவர்கள் மீதெல்லாம் புலிமுத்திரை குத்திக் கொன்று குவித்தது கொடுமையென்றால் சிங்களச் சமூகம் வாயைப் பொத்திக் கொண்டு அதை வேடிக்கை பார்த்தது அதைக்காட்டிலும் கொடுமை’ என்பது அவரது வாதம்.

‘பிரபலமான ஒரு சிங்களப் பத்திரிகையாளனுக்கே இந்தக் கதி என்றால் அப்பாவித் தமிழ் மக்கள் என்ன பாடு பட்டிருப்பார்கள்’ என்கிற இன்னொரு வாசகரின் கேள்வி நெஞ்சைத் துளைக்கிறது.

அநேகமாக. சிங்கள வாசகர்கள் தெரிவிக்கிற கருத்துகள்தான் இவை. இனவெறி பிடித்த அந்தச் சமூகத்தில் இப்படியெல்லாம் நேர்மையாக யோசிப்பவர்கள் – மைனாரிட்டி தான்! என்றாலும் சம்பந்தனையும் சுமந்திரனையும் காட்டிலும் தெளிவாகப் பேசுகிறார்கள் அவர்கள்.

கொத்துக்குண்டுகளாலும் ரசாயன ஆயுதங்களாலும் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டதைப் பார்த்து நொந்துபோய் – ‘இப்படிச் செய்வது நியாயமா’ என்று கேட்கிற நேர்மை லசந்த பிரகீத் போன்ற மிகச் சில சிங்களவர்களுக்கே இருந்தது. பெரும்பான்மைச் சிங்கள இனத்தின் மனோபாவம் அப்படியில்லை. அது வேறுமாதிரியாக இருந்தது.

அப்பாவித் தமிழர்கள் விரட்டி விரட்டி வேட்டையாடப்பட்டதைப் பார்த்து பெரும்பான்மை சிங்கள மக்கள் மகிழ்ந்தனர். அதை ரசித்தனர். இந்தியா பாகிஸ்தான் சீனா என்கிற மும்மூர்த்திகள் தந்த நவீனஆயுதங்களைக் கொண்டு நிராயுதபாணித் தமிழர்கள் கொன்றுகுவிக்கப்பட்டதை வெறியோடு கொண்டாடினர். அந்த வெறிக்குப் பெயர்தான் இனவெறி. அந்த வெறிக்குப் பெயர்தான் பிணவெறி.

அடிப்படையில் அவர்கள் பௌத்த சிங்களவர்கள். மகாவம்சத்தின் இனவெறிக் கட்டுக்கதைகளை இப்போதும் நம்புபவர்கள். சிங்கத்துக்குத்தான் பிறந்தோம் – என்று சூடம் கொளுத்திச் சத்தியம் செய்யத் தயங்காதவர்கள். ஒரு மிருகத்தின் ரத்தம் உடலில் ஓடுவதாக நம்புகிற அவர்களின் மனநிலை அப்படித்தான் இருக்க முடியும். அவர்களையோ அவர்களது வெறியையோ மாற்ற நம்மால் முடியாது.

சிங்கத்தின் வாரிசுகளான அவர்களே பரவாயில்லை என்பதைப் போல் “வாழ்வதென்றால் இந்த இனவெறியர்களோடும் பிணவெறியர்களோடும் சேர்ந்துதான் வாழ வேண்டும்! அதுதான் ராஜதந்திரம். இதுமுடியாவிட்டால் நாண்டுகொண்டு சாகவேண்டும்” என்று பேசித் திரிகிறார்களே சம்பந்தர்கள்….. இவர்களுக்கு இருக்கிற வெறி – என்ன வெறி? கொலைவெறியோடு திரியும் சிங்கராஜாவை சாந்தப்படுத்த தினம் தினம் உயிர்களை மனமுவந்து கொடுக்க வேண்டும் – என்கிற காட்டு நெறி நோக்கி நகர்த்துகிறார்களா நம்மை?

‘தமிழினம் கொல்லப்பட்டதைச் சிங்களச் சமூகம் வேடிக்கை பார்த்தது’ என்கிற குற்றச்சாட்டு ‘ஒன்றுபட்ட இலங்கை’ கோட்பாடு ஆகப்பெரிய கேணத்தனம் என்பதை அம்பலப்படுத்துகிறது. ‘பிரபல சிங்கள பத்திரிகையாளருக்கே இந்தக் கதி என்றால் அப்பாவி தமிழ் மக்கள் என்ன பாடுபட்டிருப்பார்கள்’ என்கிற ஆதங்கம் ‘கொள்ளிக்கட்டையை எடுத்து முதுகு சொரிய முயல்வது அறிவுடைமையா’ என்கிற கேள்வியை எழுப்புகிறது. இவ்வளவுக்கும் பிறகுமா சமந்தகர்களால் இதைப் புரிந்துகொள்ள முடியவில்லை!

ஒன்றரை லட்சம் உறவுகளைக் கொன்றுகுவித்தது மகிந்த ராஜபக்ச மட்டுமல்ல! பெரும்பான்மை சிங்களவர்களின் மனத்தில் கடலட்டையைப் போல ஒட்டிக்கொண்டிருக்கும் மகாவம்ச மனநிலையும் சேர்ந்தேதான் கொன்றது அவர்களை! இதை உணர்கிற அனைவரும் ‘தலைமுறை தலைமுறையாக இனப்படுகொலை தொடர்கிறது’ என்கிற விக்னேஸ்வரனின் குற்றச்சாட்டை ஏற்கின்றனர். அதை மறுப்பதென்றால் சம்பந்தரும் சுமந்திரனும் ஆதாரத்துடன் மறுக்க வேண்டும். சொல்வது விக்னேஸ்வரன் என்பதற்காக மட்டுமே உண்மைகளை ஏற்க மறுக்கக் கூடாது.

இப்போதுகூட விக்னேஸ்வரனும் விக்னேஸ்வரனின் தோழர்களும் வார்த்தைகளை அளந்துதான் பேசுகிறார்கள். தமிழ் மக்கள் பேரவை சார்பில் செப்டம்பர் 14ம் தேதி யாழ்ப்பாணத்தில் பேரணி ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ள அவர்கள் என்னென்ன நோக்கங்களுக்காக அது நடத்தப்படுகிறது என்பதை வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்கள். அந்த அறிவிப்பைப் பார்க்கிறபோது நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஈழத் தாயகம் நீதி கேட்டு நிமிர்வதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

தமிழர் தாயகத்தில் புதிய சிங்களக் குடியேற்றங்கள் பௌத்த விகாரைகளை அமைக்கின்ற சிங்கள மேலாதிக்கப் போக்கை விக்னேஸ்வரன் முதலானோர் எதிர்க்கின்றனர். தமிழரின் பண்பாட்டைச் சிதைக்கிற நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் – என்கின்றனர். காணாமல் போனோரைக் கண்டறிதல் அரசியல் கைதிகள் விடுதலையில் தாமதம் இருக்கக்கூடாது என்கின்றனர். தமிழர் தாயகத்திலிருந்து ராணுவத்தை வெளியேற்றி சொந்தக் காணிகளில் எமது மக்களை மீண்டும் குடியமர்த்தக் கோருகின்றனர்.

தமிழின அழிப்பு தொடர்பில் முழுமையான சர்வதேச விசாரணைப் பொறிமுறை தேவை தமிழர் மீதான அடக்குமுறைக்கு வழிவகுக்கும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் வடக்கு கிழக்கு இணைந்த தமிழ்த்தேசத்தின் இறைமையை அங்கீகரிக்கிற சமஷ்டி ஆட்சி முறை உருவாக்கப்படவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர். 7 ஆண்டுகள் பொறுத்திருந்த பிறகுதான் தமிழ் மக்களுக்கான கோரிக்கைகளோடு வீதிக்கு வருகிறார்கள் அவர்கள். (7 ஆண்டுகளாக இதையெல்லாம் கேட்டீர்களா இல்லையா – என்று யாரைப் பார்த்தும் கேள்வி எழுப்பவில்லை அவர்கள்.)

தமிழ் மக்கள் பேரவை சற்றேறக்குறைய ஒரு சிவில் சமூக அமைப்பு. அதில் விக்னேஸ்வரன் இருக்கிறார் என்பதற்காகவே பேரவை சொல்வதை சம்பந்தன் போன்ற ஒரு மூத்த தலைவர் நிராகரிக்கக் கூடாது. அப்படி நிராகரிக்கும் நிலையில் தமிழ் மக்கள் பேரவையின் கோரிக்கைகளில் எதிலெதில் தங்களுக்கு உடன்பாடில்லை என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்கத் தயங்கக் கூடாது. ராஜதந்திரம் – என்கிற போர்வையில் பூனைக்குட்டியை மடியிலேயே மறைத்து வைத்திருப்பது நியாயமில்லை.

‘2009ல்இ பல்லாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டதாகவும் பல்லாயிரம் பேர் காணாமல் போனதாகவும் சொல்லப்படுவது உண்மையல்ல….. விசாரணையில் சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்கவே முடியாது……. வடகிழக்கிலிருந்து ராணுவத்தை அகற்றுகிற பேச்சுக்கே இடமில்லை’ என்று மென்று முழுங்காமல் பேசுகிறது இலங்கை. இது தமிழ் மக்கள் பேரவைக்கு நேர்எதிரான அறிவிப்பு. சம்பந்தனும் சுமந்திரனும் இலங்கை அரசைப் போலவே வெட்டொன்று துண்டிரண்டாகப் பேச முன்வரவேண்டும். தமிழ் மக்கள் பேரவை சொல்வதை வழிமொழிகிறார்களா சிங்கள அரசு சொல்வதை வழிமொழிகிறார்களா – என்று வெளிப்படையாக அறிவிக்கவேண்டும்.

அனைத்துலக காணாமல் போனோர் நாளான ஆகஸ்ட் 30 அன்று நாம் நீதி கேட்கப்போவது காணாமல் போன தமிழர்களுக்காக மட்டுமல்ல…. காணாமல் போன பிரகீத் என்கிற சிங்களச் சகோதரனுக்காகவும் சேர்த்துத்தான் நாம் நீதி கேட்கப் போகிறோம். சம்பந்தர்கள் உள்பட யாரும் இதை மறந்துவிடக் கூடாது.

தமிழினத்துக்கு நீதி கேட்கத் தகுந்தவர் சம்பந்தரா விக்னேஸ்வரனா என்கிற கேள்விக்கு இடமேயில்லை. திட்டமிட்டு நசுக்கப்பட்ட எமது இனத்துக்கு நீதி கேட்கும் கடமை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. தமது சட்ட அறிவாலும் மொழி அறிவாலும் தமிழினம் பயன்பெற விக்னேஸ்வரன் அதை முழுமையாகப் பயன்படுத்துகிறார். அதனாலேயே மக்கள் பேரவையின் அறைகூவல் அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறது. தன்னுடைய அறிவையும் ஆற்றலையும் தமிழினத்துக்காகவே பயன்படுத்த சம்பந்தன் முன்வந்தால் அவரை வரவேற்காமல் இருந்துவிடப் போகிறோமா என்ன?

ஆகஸ்ட் 30 காணாமல் போனோர் நாளும் செப்டம்பர் 14 யாழ்ப்பாணப் பேரணியும் சம்பந்தருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் கிடைத்துள்ள வாய்ப்புகள். இந்த வாய்ப்புகளை சம்பந்தனும் சுமந்திரனும் பயன்படுத்திக் கொள்வார்களா? அல்லது விக்னேஸ்வரனை எதிர்த்தாக வேண்டும் – என்கிற பிடிவாதப் போக்கால் தாயகத் தமிழரின் எழுச்சியைக் கொல்வார்களா?

பின் குறிப்பு: காதலர் தினமான பிப்ரவரி 14ஐப் போன்று ஆகஸ்ட் 30ஐயும் பிரபலமாக்கப் பார்க்கிறீர்களா – என்று மின்னஞ்சல் அனுப்பியிருக்கும் சுந்தருக்கு வணக்கம். பிப்ரவரி 14ல் காதல் இருக்கிறதோ இல்லையோ வாழ்த்து அட்டைகள் – பரிசுப்பொருட்கள் என்று காதல் வியாபாரம் கடைவிரிக்கிறது. கண்ணெதிரில் கொல்லப்பட்ட தமிழ் உறவுகளுக்கு நீதி கேட்க ஆகஸ்ட் 30ஐப் பயன்படுத்துவது யந்திரத் தமிழனுக்குக் கிடைத்திருக்கிற அரிய வாய்ப்பு. இந்தியா உள்ளிட்ட பிறர் பலத்துடன் தமிழரைக் கொன்று குவித்த இலங்கையைக் கூண்டிலேற்றுகிற முயற்சிகளில் இதுவும் ஒன்று. இதில் உங்களுக்கு என்ன ஆட்சேபனை இருக்கிறது? உங்கள் ஒரிஜினல் பெயர் சுந்தரனா சுமந்திரனா?