பொதுமக்களே! அவதானமாக இருங்கள்! அனர்த்த முகாமைத்துவ மையம்

361 0

நில்வலா, கிங் மற்றும் களு கங்கைகளில் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மையம் அறிவித்துள்ளது.

சீரற்றக் காலநிலையின் காரணமாக 13 மாவட்டங்களில் பாதிப்புகள் பதிவாகி இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மையம் அறிவித்துள்ளது.

இந்த மாவட்டங்களில் 20000க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள போதும், 1000 பேர் வரையிலேயே பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணம் வழங்கல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை, அனைத்து மாவட்ட அனர்த்த முகாமை மையங்கள், அவசர உதவிப் பிரிவு மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு ஆகியன ஒன்றிணைந்து மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீரற்றக் காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களால் இதுவரையில் 7 பேர் மரணித்துள்ளனர். அனர்த்த முகாமைத்துவ மையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 25 பேர் காயமடைந்துள்ளனர். நாடு முழுவதும் மொத்தமாக 4 ஆயிரத்து 886 குடும்பங்களைச் சேர்ந்த 18 ஆயிரத்து 781 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

களுத்துறை மாவட்டத்தில் 2 ஆயிரத்து 652 குடும்பங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்து 54 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கம்பஹா மாவட்டத்தில் 747 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் அங்கு ஒருவர் மரணித்துள்ளார். ஹம்பாந்தொட்டை மாவட்டத்தில் 4 குடும்பங்களின் 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காலி மாவட்டத்தில் 700 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 636 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் காலியில் 3 பேர் மரணித்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை மாவட்டத்தில் 99 குடும்பங்களைச் சேர்ந்த 379 பேரும், மொனராகலை மாவட்டத்தில் 68 குடும்பங்களைச் சேர்ந்த 263 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பதுளை மாவட்டத்தில் 463 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 826 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் பதுளையில் ஹப்புத்தளை பிரதேசத்தில் அதிக பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

அங்கு 235 குடும்பங்களைச் சேர்ந்த 940 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பதுளையில் ஹப்புத்தளை, பண்டாரவளை மற்றும் லுனுகலை ஆகிய இடங்களில் 3 பேர் மரணித்துள்ளனர்.

புத்தளம் மாவடடத்தில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கண்டி மாவட்டத்தில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 33 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 14 குடும்பங்களைச் சேர்ந்த 64 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் நுவரெலியா மாவட்டத்தில் டயகம, பொகவந்தலாவை, நோர்வுட், பொகவானை, ஆகரப்பத்தனை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தது.

இதனால் பல குடும்பங்கள் தங்களது வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்திருப்பதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இரத்தினபுரி மாவட்டத்தில் 111 குடும்பங்களைச் சேர்ந்த 422 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் கேகாலை மாவட்டத்தில் 118 குடும்பங்களைச் சேர்ந்த 447 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் சீரற்றக் காலநிலை காரணமாக, 13 மாவட்டங்களில் 202 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. அத்துடன் 3 ஆயிரத்து 250 வீடுகள் பகுதி அளவிலும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை இலங்கைக்கு அருகில் உருவாகி இருந்த ஒக்கி சூறாவளி, கொழும்பில் இருந்து மேற்கு திசையில் 600 கிலோமீற்றருக்கு அப்பால் சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சீரற்றக் காலநிலையால் பலியான மீனவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் நட்டஈடு வழங்கப்படவுள்ளது.

மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார். அதேநேரம் எட்டு மீனவர்கள் இன்னும் காணாமல் போய் இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் பதுளை, ரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

பதுளை மாவட்டத்தில் மண்சரிவு அச்சம் காரணமாக 590 பேர் மாற்று இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மையம் அறிவித்துள்ளது

அத்துடன் இரத்தினபுரி, பதுளை பிரதான வீதியில் ஹப்புத்தளை பெரகலை மற்றும் ஹல்துமுல்லை ஆகிய பகுதிகளில் மண் மற்றும் கற்சரிவுகள் இடம்பெற்றுள்ளன.

Leave a comment