சனநாயக போர்முறை வெளிகளை தமிழ்ப் புத்திஜீவிகளும் மக்கள்நல தொண்டர்களும் மிகை நிரப்ப வேண்டும் – தயாமோகன்

2205 0

யேர்மனியில் மாவீரர்நாள் உரையில் தயாமோகன்.

உலகப் போரியல் ஒழுக்க மாற்றம், உலக அரசியல் நகர்வு, உலகப் பொருளாதார நகர்வு போன்றவை கணக்கில் எடுக்கப்பட்டு, எமது விடுதலைப் போராட்டத்தின் ஆயுத வழிமுறைப் போர் திட்டமிட்டு நசுக்கப்பட்டது. ஆனால் இன்று எம்முன்னே பல சனநாயக போராட்ட வெளிகள் விரிந்து கிடக்கின்றது. இப்போர்முறை வெளிகளை தமிழ்ப் புத்திஜீவிகளும், மக்கள் நலத் தொண்டர்களும் மிகை நிரப்ப வேண்டும்.

யேர்மனியில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவெழுச்சி நாள் நிகழ்வில் கலந்துகொண்ட, தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டு அம்பாறை மாவட்டங்களின் முன்னைநாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு.தயாமோகன் தனது சிறப்புரையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தனது சிறப்புரையில் தொடர்ந்து குறிப்பிடுகையில்,ஒன்றாக உணவருந்தி,ஒன்றாக களமாடி, இன்ப துன்பங்களை பகிர்ந்து சுமந்து, பல வெற்றிக் களிப்புகளையும், பல உணர்வுமிக்க மயிர் கூச்செறியும் சாதனைகளையும் படைத்து, விழிமூடி இன்று எமது வணக்கத்திற்காய் திருவுருவங்களாக வீற்றிருக்கும் மாவீரர்களோடு வாழ்ந்த கணங்களை திரும்பிப் பார்க்கின்றோம்.

சமகாலச் சூழ்நிலையில் தரித்து நின்று, மாவீரர்களின் கனவுகளை அவர்கள் சுமந்து நின்ற விடுதலைத் தாகத்தை எவ்வாறான வழிமுறைகளில் வென்றெடுக்க போகிறோம் என்பதைப்பற்றி சிந்திக்க வேண்டியவர்களாய் உள்ளோம்.

விடுதலை வேட்கை கொண்ட வீரர்கள் களமாடி வீழும்போது “அம்மா” என்று அழுவதில்லை. முனகுவதுமில்லை. மாறாக தேசியத் தலைவரை நேசித்தமையின் அடையாளமாக, தலைவரைக் காப்பாற்றுங்கள், தலைவருக்கு பக்கபலமாய் இருங்கள், மண்ணை மீட்டேடுங்கள் என்றுதான் தங்கள் இறுதிக் கணங்களில் உச்சரித்து விழிமூடினார்கள்.

இவ்வாறான தியாகம் நிறைந்த மாவீரர்களின் உணர்வுகளை நெஞ்சிலே நிறுத்தினால், எந்தத் தீய குணங்களும்,எதிரிக்கு துணைபோகும் துரோகச் சிந்தனைகளும் பிறக்காது. மாவீரர்களின் நினைவுகளை சுமந்தபடி பணிகள் நிறையவே உண்டு.

உலகியல் அரங்கில் தமிழ்ப் புத்திஜீவிகளும்,மக்கள்நல தொண்டர்களும் முழுமையாக ஒருங்கிணைய வேண்டும். புத்திஜீவிகள் தமது புத்திசாலித் தனங்களையும், தந்திரோபாயங்களையும் முழுமையாக எமது இனம்சார் நலனுக்காக முழுமைப்படுத்தி, எமது மக்களுக்கான நல்வழியை காண்பித்து முன்னோக்கி நகர்த்த வேண்டும்.

இவ்வாறான ஒருமித்த செயற்பாடுகளுக்கு ஊடகங்கள் தமது நிதானமான, நிறைவான,தெளிவான, சலனமற்ற பங்களிப்புக்களை நல்க வேண்டும்.தேசிய ஊடகங்களாக முன்னிறுத்தப்பட்ட பல ஊடகங்கள் வழிமுறைகளை வேறாக்கி, ஒருமித்த செயற்பாடுகளை குழப்புகின்ற முகமாக, நிதானம் தவறிய உண்மைக்குப் புறம்பான எழுத்துருவாக்கங்களை கையாண்டு உள்ளங்கை ஊடகங்களாக மிகக் குறுகிய வட்டத்தினுள் தத்தளிப்பதை காண முடிகின்றது.

தங்களின் அல்லது தங்கள் சார்ந்தவர்களின் இருப்புகள் குலைந்து விடுமோ என்ற வீணான அச்சத்தில் ஊடக தர்மங்களை குறுக்கி வாழாமல், உண்மைத் தன்மையை வெளிப்படுத்தும் ஆற்றல் உடையோராய் மாற வேண்டும். இதன் சிறந்த உதாரணமாக மாமனிதர் தயாராகி சிவராம் அவர்களை எடுத்துக் கொள்ளலாம்.அவரது ஆரம்ப போராட்ட வழிமுறை வேறு,ஆனால் சரியான புரிதலிலும், ஊடக ஒழுங்கிலும் எமது போராட்ட ஒருமைக்குள் தன்னை முழுமையாக்கி நின்றார்.

அண்மையில் தென்தமிழீழத்தில் இயற்கை எய்திய மூத்த ஊடகவியலாளர் கோபாலரத்தினம் (கோபு) அவர்கள் எமது தேசியத் தலைவரால் பாராட்டும் பரிசிலும் பெற்றவர். அந்த மதிப்பு என்பது கோபு என்ற தனி நபருக்கானது என்பதைக் கடந்து, நிதானம் மிக்க ஊடக உழைப்புக்கான பொது அடையாளமாக கொள்ளலாம்.

அதேபோன்று அதிபுத்தி ஜீவிகள் தங்கள் புத்திக் கூர்மைகளை எமது இன நலனுக்காய் பயன்படுத்த வேண்டும்.மாறாக லக்ஷ்மன் கதிர்காமர் போன்ற கோடரிக் காம்புகளின் செயலில் இருந்து திருப்பங்களை பெற வேண்டும்.

எங்கள் மத்தியிலே உள்ளகமும் வெளியகமுமாக பேசித் தீர்க்க வேண்டிய விடயங்களை பேசித் தீர்க்காமல், புறம்பேசுதல் என்பது எப்போதும் தீர்வைத் தராது. எங்கும் அது சாத்தியமானதும் இல்லை .

ஐ.நா தொடக்கம் ஆலங்குளம் வரை எமக்கான பணிகளை பட்டியலிட்டு, பகிர்ந்து கையளித்து செயல்பட வேண்டிய காலம் இதுவாகும்.இதற்காக மக்கள் முழுமையாக அணிதிரள வேண்டும்.கற்றலோனியா, குர்திஸ் இன மக்களின் விடுதலைப் போராட்ட வரலாறுகளையும், நிகழ்காலம் அவர்களுக்கு முன்மொழிந்திருக்கும் நலன்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எமது மக்களின் ஆழ்மனதை பரிபூரணமாக விளங்கியதன் வெளிப்பாடாகவே “நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிது என்று வாழுங்கள். நாடு பெரிதானால் நாம் எல்லோரும் அதற்கு சிறியவர்களே” என்று தலைவர் அவர்கள் தனது பொன்மொழியில் கூறியுள்ளார்.எனவே மாவீரர் நாளில் நாம் மீண்டும் உறுதி கொள்வோம்.

எங்கள் கைகளில் வளர்ந்துவரும் சிறார்களுக்கு மாவீரர்களின் தியாகங்களை, போராட்ட முறைமைகளை, மாவீரரின் எண்ணங்களை, தமிழீழ தேசிய வளங்களை மிக நேர்த்தியாக வளர்க்க வேண்டும்.எமது பிள்ளைகளுக்கான பெயர்களை தூயதமிழில் வைக்க வேண்டும்.

சாதாரண சிங்கள மக்கள் எமக்கு எதிரானவர்கள் அல்ல. ஸ்ரீலங்கா அரச தலைவர்களும், பேரினவாதிகளும், மகாசங்கத்தினருமே எமக்கு, எமது உரிமைக்கு எதிரான எண்ணங்களையும், இலங்கைத்தீவில் சிங்கள இனமும், பெளத்த மதமும் மாத்திரமே இருக்க வேண்டும் என்ற கொள்கையையும் கொண்டவர்கள்.

இவர்களின் சிந்தனைக்கு உயிர் கொடுத்தபடி உலகின் மேற்சொன்ன காரணங்களை கணக்கிலெடுத்து எமது போராட்டம் திட்டமிட்டு நசுக்கப்பட்டது. இதனை மிகவும் நிதானமாக உணர்ந்து, பேதங்களைக் களைந்து, தீய எண்ணங்களில் இருந்து விடுபட்டு சனநாயக போர்முறை வெளிகளை தமிழ் புத்திஜீவிகளும் மக்கள்நல தொண்டர்களும் மிகைநிரப்பவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

பல்லாயிரம் மக்களின் பங்கேற்புடன் யேர்மனியின் டோட் மூண்ட் நகரில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள் மிகவும் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.

-தொகுப்பு: இரா.செம்பியன்-

Leave a comment