இருவகை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கள் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணியின் தலைவராக சகலதுறை வீரர் திசர பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக தாரம்சாலா நகரில் எதிர்வரும் டிசம்பர் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர், அதனைத் தொடர்ந்து நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடர் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டே 28 வயதான திசர பெரேராவுக்கு அணித் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிராக ஐக்கிய அரபு இராச்சியத்திலும் லாகூரிலும் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரிலும் இலங்கை அணிக்கு திசர பெரேரா தலைவராக விளையாடியமை குறிப்பிடத்தக்கது.
உபுல் தரங்கவுக்குப் பதிலாக அணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திசர பெரேரா, இலங்கை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அணியின் 22ஆவது தலைவராவார்.
ஸிம்பாப்வே அணிக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 2 க்கு 3 என தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து ஏஞ்சலோ மெத்யூஸ் மூவகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் தலைமைப் பதவியிலிருந்து கடந்த ஜூலை மாதம் இராஜினாமா செய்திருந்தார்.
அதன் பின்னர் தினேஷ் சந்திமால் டெஸ்ட் அணித் தலைவராகவும் உபுல் தரங்க இருவகை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் அணித் தலைவராகவும் நியமிக்கப்பட்டனர்.
இதனிடையே சாமர கப்புகெதரவும் லசித் மாலிங்கவும் ஒருநாள் போட்டிகளில் பதில் தலைவர்களாக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
உபுல் தரங்கவின் தலைமையில் இலங்கை அணி படுதோல்விகளை சந்தித்தது. தென் ஆபிரிக்கா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளிடம் முழுமையான தொடர் தோல்விகளை இலங்கை எதிர்கொண்டது.
இதேவேளை, இந்தியாவுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு ஏஞ்சலோ மெத்யூஸை மீண்டும் தலைவராக்க வேண்டும் என்தில் தெரிவாளர்கள் விருப்பம் கொண்டிருந்தபோதிலும் அவர் அடிக்கடி உபாதைக்குள்ளாவதால் அந்த எண்ணம் கைவிடப்பட்டது.
ஏஞ்சலோ மெத்யூஸின் சக பாடசாலை (புனித சூசையப்பர்) வீரரான திசர பெரேரா, 2009இல் சர்வதேச ஒருநாள் அரங்கில் இந்தியாவுக்கு எதிரான கொல்கொத்தா போட்டியில் அறிமுகமானார்.
இதுவரை 125 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள திசர பெரேரா,7 அரைச் சதங்களுடன் 1,441 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். 133 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். 63 சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் 780 ஓட்டங்களைப் பெற்றுள்ள திசர பெரேரா, 45 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார்.