அத்துருகிரிய, மிலேனியம் சிட்டி பிரதேசத்தில் ஈ மற்றும் நுளம்பு நாசினி திரவத்தை தெளித்து சிறிய லொறி ஒன்றில் மீன்களை விற்பனை செய்த சந்தேக நபரொருவரை நேற்று முன்தினம் அத்துருகிரிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
விற்பனைக்காக கொண்டுவரப்பட்டுள்ள மீன்களின் மீது நுளம்புகளை ஒழிப்பதற்காக பயன்படுத்தும் திரவத்தை தெளித்து நபரொருவர் மீன்களை விற்பனை செய்வதாக அத்துருகிரிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றுக்கமைய அவ்விடத்துக்கு சென்ற பொலிஸார் நுளம்பு நாசினி போத்தலுடன் சந்தேக நபரான மீன் வர்த்தகரைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டபோது, மீன்களை விற்பனை செய்யும்போது அவற்றின் மீது ஈக்கள், பூச்சிகள் மொய்ப்பதனால், மக்கள் மீன்களை கொள்வனவு செய்யாமல் செல்வதனால் தனக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படுவதாகவும், அதனால் மீன்கள் மீது பூச்சிகள் மொய்ப்பதனை தவிர்ப்பதற்காக அவற்றின் மீது நுளம்பு நாசினியை தெளித்ததாக தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் அத்துருகிரிய பொது சுகாதார பரிசோதகர் ஹெட்டிஆரச்சி அவ்விடத்துக்கு வந்து லொறியிலிருந்த மீன்களை சோதனையிட்டதுடன் அவற்றை மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு அழிக்குமாறு உத்தரவிட்டார். இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அத்துருகிரிய பொலிஸாரால் கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.