நல்லிணக்கம் நல்லாட்சி என்பது தமிழர்களைப் பொறுத்தளவில் பெயரளவில்தான் உள்ளது! மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்!

392 0

நல்லிணக்கம் நல்லாட்சி என்பது தமிழர்களைப் பொறுத்தளவில் பெயரளவில்தான் உள்ளதென்று, உலக மீனவர் தினத்தை முன்னிட்டு மன்னாரில் நடைபெற்ற நிகழ்வில் வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசுகையில் குற்றம் சாட்டியுள்ளார்.

சமூகப் பொருளாதார மற்றும் கலாச்சார உரிமைகளை அடிப்படை மனித உரிமையாகப் புதிய யாப்பில் உறுதிப்படுத்துவோம் என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்ட 21 ஆவது உலக மீனவர் தின நிகழ்வுகள் மன்னார் நகர சபை மண்டபத்தில் கடந்த 28.11.2017 அன்று நடைபெற்றது. 14 மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ், சிங்கள மீனவர்கள் பங்கேற்றிருந்த இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றுகையில் அமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது…

நல்லிணக்கம் நல்லாட்சி என்று பேசிக்கொள்ளும் இந்த அரசு கூட போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு விசேட கவனம் செலுத்தாமல் இருந்து வருகின்றது.

எங்களுடைய செயற்பாடுகள் யாரையும் புறந்தள்ளியோ எந்தவொரு சமூதாயத்தை புறக்கணித்தே அமையவில்லை. எந்த மாவட்டமாக இருந்தாலும் போரால் பாதிக்கப்பட்ட மக்கள் என்ற அடிப்படையில்தான் நாங்கள் பார்த்து வருகின்றோம். அதன் அடிப்படையில்தான் மக்கள் நலன் சார்ந்த நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றோம்.

இன்றைய சூழலில் பெண்தலைமைத்துவ குடும்பங்களின் நிலை பெரும் இன்னல் நிறைந்ததாக காணப்படுகின்றது. அவர்களது பாதுகாப்பு, பிள்ளைகளின் பாதுகாப்பு என்பவற்றுடன் வாழ்வாதாரம் மற்றும் சமூகத்தில் அவர்களுடைய நிலை என்பன பெரும் கேள்விக்குறியாகவே இருந்து வருகின்றது. இவ்வாறான நெருக்கடிகளில் இருந்து பெண் தலைமைத்துவ குடும்பங்களை கட்டியெழுப்புவதற்கு எம்மாலான முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுப்பதில் கூடிய கவனம் எடுத்து வருகின்றோம் என்பதனை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

மகளிர் விவகாரம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சுகள் நிதியும் இன்றி அதற்கான ஆளணியும் இன்றி பெயரளவிலேயே செயற்பட்டு வருகின்றது. பாதீட்டு ஒதுக்கீட்டில் வழங்கப்படுகின்ற சொற்ப நிதியை கொண்டுதான் ஐந்து மாவட்டங்களிலும் உதவிகளைச் செய்ய வேண்டியுள்ளது.

போரால் பாதிக்கப்பட்ட மாகாணம் என்ற அடிப்படையில் எமக்கு தேவை அதிகமாக இருக்கின்ற போதிலும் மிக சொற்ப அளவிலான நிதியே மத்திய அரசினால் வழங்கப்படுகிறது. இனவழிப்பு யுத்தம் காரணமாகவே அதிகமான பெண் தலைமைத்துவ குடும்பங்கள் உருவாகியிருக்கின்றன. அதனால் போரை முன்னெடுத்த அரசு என்ற அடிப்படையில் பெண் தலைமைத்துவ குடும்பங்களின் முன்னேற்றத்திற்கு விசேட கவனம் செலுத்தியே ஆகவேண்டும்.

நல்லாட்சி நல்லிணக்கம் என்பது தமிழர்களைப் பொறுத்தளவில் பெயரளவில்தான் இருந்து வருகின்றது. தமிழர் தாயகத்தில் நடந்தேறிய இனப்படுகொலை குற்றங்களுக்கான பொறுப்புக் கூறலில் இருந்து தப்பிக்கும் உபாயமாகவே நல்லிணக்கம் நல்லாட்சி என்ற பதங்களை தற்போதைய அரசு பிரயோகித்து வருவதாக அமைச்சர் மேலும் பேசியிருந்தார்.

Leave a comment