மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக, புகையிரத சேவைகள் பாதிப்பு (காணொளி)

344 0

ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன புகையிரத நிலையங்களுக்கு இடைப்பட்ட சுரங்கப்பகுதிக்கு அண்மித்த பகுதியில், நேற்று அதிகாலை 1.00 மணியளவில் பாரிய மண்சரிவுகளும், கற்களும் புரண்டு விழுந்துள்ளதன் காரணமாக, மலையக புகையிரத சேவைகள் பாதிப்படைந்துள்ளன.

இதன் காரணமாக கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி சென்ற இரவு நேர தபால் புகையிரதம், ஒஹிய புகையிரத நிலையத்தில் தரித்துள்ளதுடன், பாதிப்பேற்பட்டுள்ள புகையிரத பாதையை சீர்செய்யும் பணிகளில் புகையிரத நிலைய ஊழியர்களும், தியத்தலாவ இராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை மண்சரிவு காரணமாக மலையக புகையிரத பாதையின் ஊடான சேவைகள் தாமதமாகலாம் என புகையிர நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், கொழும்பிலிருந்து பதுளை நோக்கி சென்ற புகையிரத்தில் பயணித்த பயணிகள் போக்குவரத்து தடைப்பட்ட காரணத்தினால் நேற்று அதிகாலை 4.00 மணியிலிருந்து குறித்த புகையிரதத்திலேயே தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் கொழும்பு பதுளை புகையிரத சேவைகள் ஒஹிய புகையிரத நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதோடு, பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி செல்லும் அனைத்து புகையிரத சேவையும் நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரதேசத்தில் பலத்த காற்று வீசி வருவதுடன், மழையும் பெய்து வருவதனால் சீர்செய்யும் பணிகளில் தாமதம் ஏற்படுவதாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.

Leave a comment