ஐகோர்ட்டு உத்தரவால் 10 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் கூறினார்.
தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்ல.ராசாமணி நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுக்கோட்டையை சேர்ந்த ராமையா என்பவர் மலேசியாவில் இருந்து 54 டன் மணலை இறக்குமதி செய்தார். இந்த மணல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்த நிலையில், தமிழக அரசு இந்த மணலை கொண்டு சென்று விற்பனை செய்ய தடை விதித்தது. இதை விலக்க வலியுறுத்தி அவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி அடுத்த 6 மாத காலத்திற்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் மூட உத்தரவிட்டு உள்ளார்.
இந்த உத்தரவு மணல் லாரி உரிமையாளர்களுக்கு அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. இதனால் 10 லட்சம் கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் 1 லட்சம் மணல் லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.
எனவே தமிழக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்து மணல் குவாரிகளை மூடும் உத்தரவுக்கு தடைபெற வேண்டும். தமிழக அரசு கடந்த காலங்களில் தனியாருக்கு மணல் குவாரிகளை குத்தகைக்கு கொடுத்தது. இதனால் அளவுக்கு அதிகமாக மணல் எடுக்கப்பட்டது. இதுவே இந்த பிரச்சினைக்கு முக்கிய காரணம் ஆகும்.
இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என நீதிபதி கூறி இருப்பதை சம்மேளனம் சார்பில் வரவேற்கிறோம். நீர்நிலைகள், சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் மணல் எடுக்க அரசு உரிய வழிமுறைகளை காண வேண்டும்.
மேலும் மணல் குவாரிகளை மூடும் உத்தரவுக்கு தடை கிடைக்கும் வரை, வெளிநாடுகளில் இருந்து அரசே மணலை இறக்குமதி செய்து, லாரி உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டும்.
அத்துடன் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி ஆற்றை ஒட்டி உள்ள பட்டா நிலங்களில் தமிழக அரசு தனிநபர்களிடம் இருந்து ‘ராயல்டி’ பெற்றுக்கொண்டு மணல் எடுக்க அனுமதி அளிக்க வேண்டும். இதன் மூலம் மணல் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தின் நிறுவன தலைவர் கோ.வெங்கடாச்சலம் கூறியதாவது:-
ஏற்கனவே கட்டுமான தொழில் முற்றிலுமாக முடங்கி கிடக்கிறது. மணல் குவாரிகளை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டிருப்பது கட்டுமான துறையில் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தும். எம்-சான்ட் மணலுக்காக மலையை உடைக்கிறார்கள். இன்னும் சில வருடங்களில் மலையை காணோம் என்ற நிலை ஏற்படும்.
எனவே எம்-சான்ட் குவாரிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும். மேலும் எம்-சான்ட் மணல் குவாரிகளை அதிகப்படுத்தி, அதன் விலையை நிர்ணயிக்க ஒரு குழுவை அரசு அமைக்கவேண்டும்.
மணல் குவாரிகளை மூடுவதன் மூலம் அந்த துறையை ஒட்டுமொத்தமாக நம்பி இருக்கின்ற 20 லட்சம் பேர் பாதிப்பு அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
மணல் குவாரிகளை ஒழுங்காக நடத்தினால் டாஸ்மாக் மூலம் வரும் வருமானத்தை விடவும் அரசுக்கு 4 மடங்கு அதிக வருமானம் கிடைக்கும். மணல் குவாரிகளை ஒழுங்காக நடத்தாதது அரசின் மெத்தன போக்கையே காட்டுகிறது. கட்டுமான துறையில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையே போய்விடும் நிலை ஏற்பட்டுள்ளது. கட்டுமான துறை களவு போகும் துறையாக மாறிவிட்டது.இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் கூறியதாவது:-
கோர்ட்டு உத்தரவு மணல் சார்ந்த அனைத்து தொழில்களையும் பாதிக்கும். இதுதொடர்பாக மணல் சார்ந்த அனைத்து துறை நிர்வாகிகளையும் அழைத்து கூட்டம் நடத்தி நல்ல முடிவு எடுக்க வேண்டும். ஆன்-லைனில் மணல் விற்பனையை அரசு முறைப்படுத்தி இருப்பதால் தற்போது நடைமுறையில் உள்ள 11 மணல் குவாரிகளில் எந்த முறைகேடும் நடக்கவில்லை.
வழக்கு தொடர்ந்தவர்கள் பழைய குற்றங்களை சுட்டிக்காட்டி தான் உத்தரவு பெற்று இருக்கிறார்கள். இந்த தீர்ப்பை கோர்ட்டு மறுபரிசீலனை செய்ய வேண்டும். அரசு இதுதொடர்பாக மேல் முறையீடு செய்ய வேண்டும். திருச்சி, தஞ்சை, விழுப்புரம் ஆகிய 3 மண்டலங்களில் உள்ள இந்த மணல் குவாரிகளுக்கு 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து அரசு கண்காணிக்கலாம். மேலும், அங்கு சி.சி.டி.வி. கேமரா மற்றும் எடை மேடை அமைத்தும் மணல் அள்ளி செல்வதை முறைப்படுத்தலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை பாடியை சேர்ந்த சிமெண்டு விற்பனையாளர் எம்.ஜோசுவா கூறியதாவது:-
மணல் தட்டுப்பாடு ஏற்படும்போது, கட்டுமான தொழிலை மேற்கொள்ள முடியாது. மணல் குவாரிகளை மூடுவதினால் சிமெண்டு விற்பனை கடுமையாக பாதிக்கப்படும். எனவே கட்டுமான தொழிலுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு எம்-சான்ட் பயன்பாட்டை அரசு ஊக்குவிக்கவேண்டும். எம்-சான்ட் தரத்தை மேம்படுத்தினால் நன்றாக இருக்கும்.
இதேபோல மணல் இறக்குமதி செய்வதற்கும் அரசு அனுமதி கொடுக்கவேண்டும். மணல் குவாரிகளை மூடுவதற்கு முன்பு அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே கட்டுமான தொழிலை நிலை நிறுத்த முடியும். மேலும் கட்டுமான தொழிலை நம்பியிருப்பவர்களுக்கு வாழ்வாதாரத்தை அளிக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.
அண்ணா பல்கலைக்கழக கட்டிட வடிவமைப்பு துறை பேராசிரியர் ஆர்.செந்தில் கூறியதாவது:-
கட்டிடம் கட்டுவதில் மணல் பெரும் பங்குவகிக்கிறது. அதுவும் ஆற்றுமணல்தான் மிகவும் ஏற்றது. அதுதான் கலவைக்கு மிகச்சிறந்தது.
காரணம் ஆற்று மணல் கட்டிடக்கலவைக்கு பயன்படுத்தினால் தான் அது நன்றாக சிமெண்டுடன் கலந்து பிடிப்பு ஏற்படுத்தும். விரைவில் அது காய்ந்து செட் ஆகிவிடும்.
இப்போது மணலுக்கு தட்டுப்பாடு வந்துள்ளது. அதன் காரணமாக ஆற்று மணலுக்கு பதிலாக மாற்றுப்பொருள் பயன்படுத்த ஆராய்ச்சியை நடத்தி வருகிறோம். மணலுக்கு பதிலாக கருங்கல்லில் இருந்து பொடியாக தயாரிக்கப்பட்ட மணல் ‘எம் சாண்ட்’ (தயாரிக்கப்பட்ட மணல்) இப்போது சில இடங்களில் பயன்படுத்தப்படுகின்றன.
இப்போது தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளில் இருந்து மணலுக்கு மாற்றுப்பொருள் தயாரிக்கலாமா? என்று ஆராய்ச்சி செய்து வருகிறோம். தொழிற்சாலைகளில் இருந்து வரும் தாமிரக்கழிவை (காப்பர் சேக்) மணலுக்கு பதிலாக சிறிய அளவில் பயன்படுத்துகிறார்கள். அதாவது மணல் 10 மூட்டை கொட்டுவதற்கு பதிலாக 9 மூட்டை மணலும், தாமிரக்கழிவு ஒரு மூட்டையும் கொட்டப்பட்டு ஆராய்ச்சி செய்து வருகிறோம். மேலும் தாமிரக்கழிவு போல ரப்பர் தொழிற்சாலையில் இருந்து வெளிவரும் ரப்பர் கழிவும் மணலுக்கு பதில் பயன்படுத்தலாமா? என்றும் ஆராய்ச்சி செய்து வருகிறோம்.
கட்டிடம் கட்டும்போது கான்கிரீட் தூண் எழுப்பப்படுகிறது. அந்த தூண்களுக்கு பதிலாக இரும்புத்தூண் நிறுத்தலாம்.அதன் காரணமாக மணல் அதிகம் பயன்படுத்துவது குறையும். கான்கீரிட் பயன்படுத்தும் இடங்களில் எல்லாம் இரும்பு பயன்படுத்தப்படலாம். இது வெளிநாடுகளில் உள்ளது. நமது பழைய வீடுகளில் கான்கிரீட் தூண்களுக்கு பதிலாக இரும்புத்தூண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.எனவே கான்கிரீட் பயன்படுத்தும் இடங்களில் இரும்பு பயன்படுத்தலாம்.இவ்வாறு அவர் கூறினார்.