இலங்கைக்கு தென்மேற்குக் கடலில் உண்டாகியிருக்கும் காற்றழுத்தம் கடும் தாழமுக்கமாக மாறியிருக்கிறது. கொழும்புக்கு சுமார் 200 கிலோமீற்றர் தொலைவில் உள்ள இத்தாழமுக்கம் மேலும் வலுப்பெற்று இலங்கையைக் கடந்து அரேபியக் கடல் பிராந்தியத்தை அடையவிருக்கிறது. இதனால், இன்று முழுவதும் தற்போதைய சீரற்ற காலநிலையே தொடரும் என வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
கடும் மழை, பலத்த வேகத்துடனான காற்று என்பன நாடு முழுவதும் நிலவும் என்றும் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என்றும் கரையோரப் பகுதிகளில் கடல் சீற்றம் வலுவாக இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தெற்கு, சபரகமுவ, மத்திய, மேல் மற்றும் ஊவா மாகாணங்களில் சுமார் 100 முதல் 150 மில்லி மீற்றர் மழை பெய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.