அரசாங்கத்தை வலியுறுத்தி சத்தியாகிரக போராட்டம்!

240 0

கினிகத்தேனை பொல்பிட்டிய புரோட்லேன்ட் நீர் மின் உற்பத்தி நிலையத்தின் பிரதான காரியாலயத்திற்கு முன்பாக இப்பிரதேசத்தை சேர்ந்த 34 குடும்பத்தினர் கூடாரங்களை அமைத்து இரண்டாவது நாளாக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

பொல்பிட்டிய புரோட்லேன்ட் நீர் மின் உற்பத்தி நிலையத்திற்கு சுரங்கப்பதையூடாக நீர் பெறுவதற்கு அகழ்வு வேலையின் போது அருகில் உள்ள 40 குடும்பங்களின் குடியிருப்புகள் முற்றாக பாதிப்படைந்தது.

கடந்த காலங்களில் ஏற்பட்ட இந்த பாதிப்புகளுக்கு அரசாங்க தரப்பினரும், நீர் மின் உற்பத்தி நிலைய நிறுவன அதிகாரிகளும் மின்சாரதுறை அமைச்சின் ஊடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு மற்றும் குடியிருப்புகள் தொடர்பில் ஆராய்ந்து ஒரு நிலைக்கு வந்தனர்.

இதனடிப்படையில் பாதிப்புக்குள்ளான 40 குடும்பங்களில் சிலருக்கு வீடுகள் அமைத்து கொடுக்க நடவடிக்கைகள் எடுத்துள்ள போதிலும், இதில் பாதிப்புற்ற 34 குடும்பங்களுக்கு மாதாந்தம் தற்காலிக வீடுகளில் வசிப்பதற்கு 30 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு தொகையாக வழங்கப்பட்டு வருகின்றது.

ஆனால் நிலையான ஒரு இடத்தில் தங்களை குடியமர்த்தாது வழங்கப்பட்டு வரும் நஷ்டஈடு தொகையில் வாழ்நாளை கழிக்க முடியாது என கூறி 34 குடும்பங்களை சேர்ந்தவர்கள் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

எங்களது எதிர்கால சந்ததியினருக்கு சொந்த வீடு ஒன்றை அமைத்துக் கொடுக்க வேண்டும். இந்த நாட்டில் வாடகை வீடுகளில் வாழ்வதற்கு எமக்கு விருப்பம் இல்லை. சொந்த வீடுகளில் வாழ்ந்த எங்களை வாடகை வீட்டில் வாழும் அளவிற்கு அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்கள் அமைந்து விட்டது.

எமக்கு தேவை சொந்த வீடு, சொந்த நிலம் அல்லது பெருந்தொகையான நஷ்டஈடு, இதனூடாக எமது வாழ்க்கையை முன்னெடுத்து செல்ல முடியும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த மக்கள் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

இந்த விடயம் சம்மந்தமாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிடப்பட்டிருந்த போதிலும், அவர்கள் காட்டிய காலத்தாமதமே எங்களை வீதியில் அமர வைத்துள்ளது.

எனவே உடனடியாக தீர்க்கமான முடிவு ஒன்றினை எமக்கு பெற்றுத் தருமாறு அரசாங்கத்தை வழியுறுத்துவதாக சத்தியாகிரகத்தில் ஈடுப்பட்டுள்ளவர்கள் மேலும் தெரிவித்தனர்.

Leave a comment