ஊழல் வழக்குகளில் சிக்கித் தவிக்கும் நவாஸ் ஷெரீப், மகள் மரியம் நவாஸ், மருமகன் கேப்டன் சப்தார் ஆகியோருடன் கோர்ட்டில் ஆஜரானார்.
பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகள் அமர்வு, நவாஸ் ஷெரீப், அவரது மகள் மரியம் நவாஸ், மருமகன் கேப்டன் சப்தார், மகன்கள் ஹசன் நவாஸ், உசேன் நவாஸ் ஆகியோர் மீது தேசிய பொறுப்புடைமை கோர்ட்டில் ஊழல் வழக்குகள் தொடுத்து, அவற்றின் மீதான விசாரணையை 6 மாதங்களில் முடிக்க உத்தரவிட்டுள்ளது.
அந்த உத்தரவின்பேரில் லண்டன் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள், அல் அஜிசியா உருக்காலை, ஹில் மெட்டல் எஸ்டாபிளிஸ்மென்ட் ஆகியவற்றில் நவாஸ் ஷெரீப் குடும்பத்தினர் செய்த முதலீடுகள் தொடர்பாக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த வழக்குகள் இஸ்லாமாபாத் தேசிய பொறுப்புடைமை கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது நவாஸ் ஷெரீப், மகள் மரியம் நவாஸ், மருமகன் கேப்டன் சப்தார் ஆகியோருடன் கோர்ட்டில் ஆஜரானார்.
இந்த 3 வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் நவாஸ் ஷெரீப் முறையிட்டுள்ளார். அதை விசாரித்த அந்த கோர்ட்டு தீர்ப்பை கடந்த 23-ந் தேதி ஒத்தி வைத்து உத்தரவிட்டது.
இதை சுட்டிக்காட்டி, இந்த தீர்ப்பு வருகிறவரை விசாரணையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று நவாஸ் ஷெரீப் வக்கீல், தேசிய பொறுப்புடைமை கோர்ட்டில் முறையிட்டார்.
ஆனால் இதற்கு தேசிய பொறுப்புடைமை அமைப்பின் வக்கீல் சர்தார் முசாபர் எதிர்ப்பு தெரிவித்தார். சாட்சிகள் ஆஜராகியுள்ளதால் அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
இருந்தபோதும் அதை நிராகரித்து, வழக்கின் விசாரணையை டிசம்பர் 4-ந் தேதிக்கு தேசிய பொறுப்புடைமை கோர்ட்டு ஒத்திவைத்து உத்தரவிட்டது.