கோத்த ராஜபக்ஷவின் பென்டகன் என வர்ணிக்கப்படும் கொழும்பின் புறநகரான அக்குரே கொடவில் அமைக்கப்பட்டுவரும் பாதுகாப்புத் தலைமையக அடுக்குமாடிக் கட்டடப்பணிகளை இடைநிறுத்துவதற்கு அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்ப ட்டுள்ளது.அத்துடன் அதனை அமைத்துவரும் ஒப்பந்தக்காரரான மூதித ஜெயக்கொடி அசோசியேட்ஸ் நிறுவனத்துக்கான கொடுப்பனவையும் நிறுத்துவதற்கு அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த அடுக்குமாடிக் கட்டடத்துக்கான உண்மையான கொடுப்பனவுத் தகவல்கள் தெரியப்படுத்தப்படாமலேயே மேற்கொள்ளப்பட்டன என்பதை அடிப்படையாகக் கொண்டே இதை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்ததாக அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
40பில்லியன் செலவில் இந்த அடுக்குமாடி கட்டடம் அமைக்கப்பட்டு வந்தது. இக்கட்டடத்துக்கான கொடுப்பனவுகள் பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவிக்காமலேயே கோத்தபாய ராஜபக்ஷவினால் வழங்கப்பட்டு வந்துள்ளமை விசாரணைமூலம் தெரியவந்துள்ளது.
இந்தக் கட்டட நிர்மாணிப்புக்கான ஆலோசனைக் குழுவுக்கு 600 மில்லியன் ரூபா இதுவரை செலுத்தப்பட்டுள்ளது. இன்னும் பெருமளவிலான பணம் செலுத்தவேண்டியுள்ளது. இந்நிலையில், பாதுகாப்பு அமைச்சு கட்டட நிர்மாணத்துக்கான கேள்விப்பத்திரத்தைக் கோரிய பின்னரே இது கம்பெனிச் சட்டத்தின்கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ளது.