எரிமலை சீற்றத்தால் பாலி விமான நிலையம் மூடல்: இந்தியர்கள் நாடு திரும்ப உதவி – அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதி

317 0

இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு சென்ற இந்திய சுற்றுலா பயணிகள் நாடு திரும்புவதற்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதி அளித்துள்ளார்.

இந்தோனேசியாவின் பிரபல சுற்றுலாத்தலமான பாலி தீவுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அங்குள்ள மவுண்ட் அகுங் எரிமலை சில நாட்களுக்கு முன்பு வெடித்துச் சிதறி கரும்புகை, சாம்பல் வெளியேறி வருகிறது. இதன் காரணமாக சுமார் 10 கி.மீ. சுற்றளவுக்கு எரிமலை சாம்பல் படர்ந்துள்ளது. சுமார் 3 கி.மீ. சுற்றளவுக்கு கரும்புகை சூழ்ந்துள்ளது.

எரிமலை வெடிப்பு காரணமாக கடந்த திங்கள்கிழமை பாலி விமான நிலையம் மூடப்பட்டது. எரிமலையின் சீற்றம் தொடர்வதால் நேற்று 2-வது நாளாகவும் விமான நிலையம் மூடப்பட்டிருந்தது. இதனால் இந்தியர்கள் உட்பட சுமார் 60 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பரிதவித்து வருகின்றனர். நூற்றுக்கணக்கானோர் விமான நிலையத்திலேயே தஞ்சமடைந்துள்ளனர்.

மவுண்ட் அகுங் எரிமலையை சுற்றி சுமார் 10 கி.மீ. தொலைவுக்குள் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். உள்ளூரை சேர்ந்த புத்து சுலாஸ்மி கூறியபோது, “மலையில் இருந்து சுமார் 3 மைல் தொலைவில் எங்கள் வீடு உள்ளது. எரிமலை வெடிப்பு சத்தம், கரும்புகை, லாவா குழம்புகளின் வெப்பம் காரணமாக வீட்டிலிருந்து வெளியேறிவிட்டோம். மீண்டும் எங்கள் வீட்டுக்குச் செல்ல முடியுமா என்பது சந்தேகமாக உள்ளது என்று தெரிவித்தார்.

பாலியின் டென்பசாரில் உள்ள விமான நிலையம் மூடப்பட்டிருப்பதால் அங்கு சுற்றுலா சென்றிருந்த இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இதுதொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: பாலியில் உள்ள இந்தியர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். அவர்கள் நாடு திரும்புவதற்கு தேவையான உதவிகள் வழங்கப்படும். ஜகார்த்தாவில் உள்ள இந்திய தூதர் பிரதீப் ராவத், பாலியில் உள்ள துணை தூதர் சுனில் பாபு ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவைய ான உதவிகளை செய்வார்கள். பாலி நிலவரத்தை நான் உன்னிப்புடன் கவனித்து வருகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment