ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தமாகா போட்டியிடாது: வாசன் அறிவிப்பு

263 0

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் த.மா.கா. போட்டியிடவில்லை என்றும் தேர்தல் களத்தில் ஒதுங்கி இருப்பதாகவும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு காலியான ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த ஏப்ரல் 12-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. பணப்பட்டுவாடா உள்ளிட்ட முறைகேடுகள் காரணமாக வாக்குப் பதிவுக்கு 2 நாள்கள் முன்பாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் வரும் டிசம்பர் 21-ம் தேதி ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வேட்பாளர் தேர்வை அனைத்து கட்சிகளும் முடிவு செய்து வருகின்றன. திமுக சார்பில் ஏற்கனவே போட்டியிட்ட மருது கணேஷையே வேட்பாளராக நிறுத்தியுள்ளனர். திமுகவுக்கு காங்கிரஸ், முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. தேமுதிகவும் தேர்தலில் போட்டியிடவில்லை, யாருக்கும் ஆதரவு இல்லை எனத் தெரிவித்துள்ளது.

தினகரன் தரப்பில் தானே நிற்கப்போவதாக அவர் அறிவித்துள்ளார். சீமான் தனது கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். பாஜக இதுவரை தன் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. அதிமுக தரப்பில் இன்னும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் த.மா.கா. போட்டியிடவில்லை என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். இதுகுறித்து புதன்கிழமை அன்று அறிக்கை வெளியிட்டுள்ள அவர், ”தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைந்த பிறகு அவர் ஏற்கெனவே சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்ட சென்னை ஆர்.கே. நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது.

பணப்பட்டுவாடா புகாரின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் கடந்த ஏப்ரல் 12-ம் தேதியன்று நடைபெற இருந்த இடைத்தேர்தலை ரத்து செய்தது. தற்சமயம் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரிலேயே இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த இடைத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடவில்லை என்பதோடு தேர்தல் களத்தில் ஒதுங்கி நிற்பது என்ற முடிவை எடுத்திருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

முன்னர் நடைபெறுவதாக இருந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணியும், எடப்பாடி அணியும் தனித்தனியாகப் போட்டியிட்டன. அதில் ஓபிஎஸ் அணிக்கு ஜி.கே.வாசன் ஆதரவு தெரிவித்தது நினைவுகூரத்தக்கது.

Leave a comment