தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாள், மாவீரர் நாள் தொடர்பில் வடக்கில் மட்டும் சுமார் 30 இற்கும் மேற்பட்ட நிகழ்வுகள் இம்முறை பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நிகழ்வுகள் குறித்தும் அதில் என்ன நடந்தது என்பது தொடர்பிலும் முழுமையாக அறிந்துகொள்ள தற்போது பொலிஸார் அந்த நிக்ழ்வுகள் குறித்து தகவல் சேகரித்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி ருவன் குணசேகர தெரிவித்தார்.
கடந்த 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிரபாகரனின் பிறந்த நாள் நிக்ழ்வுகளும், நேற்று முன் தினம் மாவீரர் நாள் நிகழ்வுகளும் வடக்கில் பதிவாகின. இது தொடர்பில் பல்வேறு தர்ப்பினரும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வரும் நிலையில், பொலிஸாரிடம் அது தொடர்பில் வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோவின் நேரடி கட்டுப்பாட்டில், இந்த தகவல் சேகரிப்பு மற்றும் அதன் உள்ளடக்கம் தொடர்பிலான ஆய்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கேசரிக்கு சுட்டிக்காட்டினார்.