சத்யம் திரையரங்குகள், மார்க், பட்டேல் குழுமங்களுக்கு சொந்தமான 33 இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று ஒரே நாளில் தீவிர சோதனை நடத்தினர். சசிகலா குடும்பத்தின் பினாமிகள் குறித்த ஆதாரங்களைச் சேகரிக்கவே இந்த நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
சசிகலா, தினகரன், திவாகரன் குடும்பத்தினர் தொடர்புடைய 187 இடங்களில் கடந்த 9-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி பல ஆவணங்களை கைப்பற்றினர். 5 நாட்கள் நடத்தப்பட்ட இந்த மெகா சோதனை, தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல பினாமிகள் பெயரில் இவர்கள் சொத்துகளை வாங்கியதற்கான ஆதாரங்கள் சிக்கியதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் கங்கா பவுண்டேஷன் என்ற நிறுவனம் உள்ளது. பெரம்பூரில் உள்ள ‘வீனஸ் ஸ்பெக்ட்ரம் மால்’ இந்த நிறுவனத்தின் கீழ் செயல்படுகிறது. அதில் உள்ள எஸ்.2 திரையரங்குகளும் இந்த நிறுவனத்துக்கு சொந்தமானவைதான். கங்கா பவுண்டேஷனின் தலைவராக சி.சிட்டிபாபு, நிர்வாக இயக்குநராக எஸ்.செந்தில்குமார் உள்ளனர்.
இந்த நிறுவனம் தொடர்புடைய அனைத்து இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். வீனஸ் ஸ்பெக்ட்ரம் மால், அங்குள்ள 5 திரையரங்குகள், பெரம்பூர் பெரியார் நகர் 6-வது தெருவில் உள்ள சிட்டிபாவுவின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடந்தது. இங்கிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள கங்கா பவுண்டேஷன் அலுவலகத்துக்கு அதிகாரிகள் கொண்டு வந்தனர். சிட்டிபாபுவையும் அங்கு அழைத்து வந்து, நீண்ட நேரம் விசாரணை நடத்தினர்.
மார்க் நிறுவனம்
ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் ‘மார்க்’ நிறுவனத்தின் அலுவலகங்களிலும் நேற்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். மார்க் குழும இயக்குநர்களில் முக்கியமானவர் ஜிஆர்கே எனப்படும் ஜி.ராமகிருஷ்ணன் ரெட்டி. இவரது வீடு சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ளது. நேற்று காலை 7 மணி அளவில் இந்த வீட்டுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் 10 பேர் வந்து சோதனையில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான ஆவணங்களை கைப்பற்றினர். அவற்றை, அதே பகுதியில் உள்ள ஜிஆர்கே ரெட்டியின் மற்றொரு வீட்டுக்கு அதிகாரிகள் கொண்டு சென்றனர். திருவான்மியூரில் உள்ள மார்க் குழுமத்தின் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது.
அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித் தருவதாக கூறி, ரூ.11 கோடி மோசடி செய்ததாக ஜிஆர்கே.ரெட்டி மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பலர் புகார் கொடுத்தனர். அந்த புகார்களின்பேரில் கடந்த 8-ம் தேதி ரெட்டி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்க்கரை ஆலை
காஞ்சிபுரம் மாவட்டம் பாலூர் அருகே பழையசீவரத்தில் பத்மாவதி சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இது, பட்டேல் ஆப் பிரபாத் குழுமத்துக்கு சொந்தமானது. இந்த ஆலை 2 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. தங்களுக்கு கொடுக்க வேண்டிய பல லட்சம் ரூபாய் நிலுவைத் தொகையை இந்த ஆலை நிர்வாகம் வழங்காமல் உள்ளதாக கரும்பு விவசாயிகள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர். இந்த ஆலைக்கு நேற்று காலை 2 கார்களில் வந்த 14 அதிகாரிகள், சோதனையில் ஈடுபட்டனர். மூடப்பட்டிருக்கும் சர்க்கரை ஆலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. பட்டேல் குழுமத்தின் முக்கிய நிர்வாகியான தினேஷின் வீடு, அலுவலகத்திலும் வருமான வரி சோதனை நடந்தது.
மேலும், மதுரை மில்லேனியம் ஷாப்பிங் மால், அதன் உரிமையாளருக்கு சொந்தமான 2 ஜவுளிக் கடைகள், ஒரு திரையரங்கு, நெல்லை விஸ்வம் எக்ஸிம் நிறுவனம் மற்றும் தூத்துக்குடி, செங்கோட்டை, தென்காசி ஆகிய இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னையில் 21 இடங்கள் உட்பட தமிழகம் முழுவதும் 33 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
சசிகலாவின் பினாமிகளா?
சசிகலா, அவரது குடும்பத்தினர் தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. ஜாஸ் சினிமாஸ் நிறுவன நிர்வாகி விவேக் மற்றும் ஊழியர்களிடமும் விசாரணை நடந்தது. சத்யம் திரையரங்குகளை நிர்வகித்து வந்த ‘லக்ஸ்’ சினிமா நிறுவனத்தை ஜாஸ் சினிமாஸ் நிறுவனம் கையகப்படுத்தியது. இதில், முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில், எஸ்.2 திரையரங்குகளில் வருமான வரி சோதனை நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சசிகலாவின் மிடாஸ் நிறுவனத்தில் மதுபானங்கள் தயாரிக்க சர்க்கரை ஆலையில் இருந்து வெளிவரும் கழிவுப் பொருட்கள்தான் மூலப்பொருட்களாக பயன்படுத்தப்படுகின்றன. எனவே, சசிகலா தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனைக்கும், பத்மாவதி சர்க்கரை ஆலை உள்ளிட்ட இடங்களில் நேற்று நடைபெற்ற சோதனைக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. சசிகலாவின் பினாமிகள் குறித்த ஆதாரங்களை சேகரிக்கவே இந்தச் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
சோதனை குறித்து வருமான வரித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “வரி ஏய்ப்பு, சட்டவிரோத பணப்பரிமாற்றம் போன்ற புகார்களின் அடிப்படையில் சோதனை நடத்தப்படுகிறது” என்றனர்.