ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முல்லைத்தீவைச் சேர்ந்த 78 வயது முதியவருக்கு ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்தது வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இவ்வழக்கு விசாரணை முடிவடைந்து இன்றைய தினம் தீர்ப்புக்காக திகதியிடப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த தீர்ப்பு வவுனியா மேல் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த 2013ஆம் ஆண்டு முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த வயது முதிந்த நபர் ஒருவர் தனது பக்கத்து வீட்டு ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த முல்லைத்தீவு பொலிசார் குறித்த முதியவரை கைது செய்து முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியிருந்தனர்.
முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்ற நிலையில் குறித்த முதியவருக்கு எதிராக கடந்த 2017ஆம் ஆண்டு யூன் மாதம் 23ஆம் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்தால் குற்றப் பகிர்வுப் பத்திரம் வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
வவுனியா மேல் நீதிமன்றில் நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் முன்னிலையில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்ததுடன் சாட்சிகள் நெறிப்படுத்தப்பட்டு இன்றைய தினம் தீர்ப்புக்காக திகதியிடப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில் வழக்கு விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பலலேந்திரன் சசிமகேந்தின் குறித்த சந்தேக நபரான 78 வயது முதியவரை குற்றவாளியாக இனங்கண்டு, ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்பளித்தார்.
அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50000 ரூபாய் நஸ்ட ஈடும் செலுத்த வேண்டும் எனவும் அதனை செலுத்த தவறின் 2 மாத கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் 1000 ரூபாய் அபாரதமும் அதனை செலுத்த தவறின் ஒரு மாத சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் அத் தீர்ப்பில் மேலும் தெரிவித்துள்ளார்.