தென்கொரியாவிற்கான அரசமுறை விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜெயினுக்குமிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நாளை இடம்பெற திட்டமிடப்பட்டிருந்த போதிலும், இலங்கை ஜனாதிபதி மீது தான் கொண்டுள்ள நன்மதிப்பினை வெளிப்படுத்தும் வகையில் ஜனாதிபதியை இன்றே வரவேற்பதற்கான ஏற்பாடுகளை தென்கொரிய ஜனாதிபதி மேற்கொண்டிருந்தார்.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் மூன்று நாள் அரசமுறை விஜயத்தின் முதற்கட்டமாக சியோல் நகரில் அமைந்துள்ள ஜொக்யேசா புராதன பௌத்த விகாரையில் வழிபாடு செய்வதற்காக இன்று (28) பிற்பகல் அங்கு விஜயம் செய்தபோது, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் கொரிய ஜனாதிபதியும் அங்கு வருகைதந்து ஜனாதிபதியை சினேகபூர்வமாக வரவேற்றார்.
இத்தகைய விசேட வரவேற்பினைத் தனக்கு வழங்கியமைக்காக தென்கொரிய ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, இந்த இதயபூர்வமான நட்புணர்வு தமது வாழ்வின் முக்கிய ஞாபகக்குறிப்பாக அமையும் எனக் குறிப்பிட்டார்.
தென்கொரிய ஜனாதிபதியின் இந்த செயலானது அவர் இலங்கை மீதும் இலங்கை மக்களின் மீதும் கொண்டுள்ள நன்மதிப்பையும் தெளிவையும் உறுதிசெய்கின்றது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
தன்னைப்போலவே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் கிராமத்திலிருந்து வந்த தலைவர் என்றவகையில் ஜனாதிபதி பதவியை அடையும் வரையில் தாங்கள் கடந்து வந்த பாதை மிகவும் கடினமானதென்பதை நினைவுகூர்ந்த தென்கொரிய ஜனாதிபதி, இருவருமே தற்போது மக்கள் சேவையில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கிடையிலும் பல பொது விடங்கள் காணப்படுகின்றதெனக் குறிப்பிட்ட தென்கொரிய ஜனாதிபதி, இரு நாடுகளுமே காலனித்துவ ஆட்சிக்கு உட்பட்டிருந்ததுடன் யுத்தத்திற்கும் முகங்கொடுத்து இறுதியில் ஜனநாயகத்தை நிலைநாட்டியுள்ளன எனத் தெரிவித்தார். யுத்த
வெற்றியின் பின்னர் துரித அபிவிருத்தியை நோக்கிப் பயணிக்கும் அதேவேளை ஊழல், மோசடி என்பவற்றிற்கெதிராகச் செயற்படுவதாகவும் தென்கொரிய ஜனாதிபதி தெரிவித்தார்.
இத்தகைய பின்னணியில் இருநாடுகளுக்கிடையிலும் பல விசேட தொடர்புகள் எதிர்காலத்தில் உருவாக்கப்படும் என்றும் தென்கொரிய ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்தார்.
இரு அரச தலைவர்களுக்கும் ஆசீர்வாதம் வழங்கிய ஜொக்யேசா விகாரையின் விகாராதிபதி சியோல் ஜியோங் தேரர், நேர்மையான அரச தலைவர்களாக இருநாட்டு ஜனாதிபதிகளும் தமது நாட்டின் அபிவிருத்திக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர் எனத் தெரிவித்தார்.
1913 ஆம் ஆண்டு அநகாரிக்க தர்மபாலவினால் ஜொக்யேசா விகாரையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட புத்த பெருமானின் புனித தந்தத்தை வழிபடக் கிடைத்தமைக்கு ஜனாதிபதி இதன்போது மகிழ்ச்சி தெரிவித்தார்.
அமைச்சர்களான கலாநிதி சரத் அமுனுகம, திலக் மாரப்பன, தயா கமகே, ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, தலதா அத்துகோரல, மலிக் சமரவிக்கிரம ஆகியோரும் ஜனாதிபதியுடன் இந்த விஜயத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.