சிரியாவில் ரஷ்யா நடத்திய விமானப்படை தாக்குதலில் 21 குழந்தைகள் உட்பட 53 பேர் கொல்லப்பட்டுள்ளதாக கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.
கிழக்கு சிரியாவில் உள்ள அல்-ஷஃபா கிராமத்தில் ரஷ்யா நடத்திய விமானப்படை தாக்குதலில் பொதுமக்கள் 53 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், இத்தாக்குதலில் இறந்தவர்களில் 21 பேர் குழந்தைகள் என சிரிய மனித உரிமைகளுக்கான ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சிரியாவின் பல்வேறு நகரங்களை ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தினர் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அந்த நகரங்களை மீட்க சிரியா அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதற்காக, ரஷ்யா அரசும் சிரியா அரசுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது.
ஐ.எஸ் அமைப்பு கட்டுப்பாட்டில் உள்ள கடைசி மாகாணங்களில் ஒன்றான டேர் அல்-ஜோரில் அல்-ஷஃபா கிராமம் உள்ளது.
இப்பகுதியில் ரஷ்யா ராணுவம் வான்வழி நடத்தியது. ஆறு நீண்ட தூர குண்டு வீசும் விமானங்கள் மூலம் இப்பகுதியில் தாக்குதல் நிகழ்த்தியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. தீவிரவாதிகள் மற்றும் அவர்களின் இருப்புகள் மீதுதான் தாக்கியதாக ரஷ்யா ராணுவம் கூறியுள்ளது.
பொதுமக்கள் குடியிருப்புகளில் நடைபெற்ற தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டதாக அந்த கண்காணிப்பு குழு முதலில் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்த தாக்குதலில் 21 குழந்தைகள் உயிர்ழந்துள்ளதாக சிரிய மனித உரிமைகளுக்கான ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டு போர் தொடங்கியதிலிருந்து இதுவரை இப்பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் சுமார் 3,40,000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.